பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
ADDED : மே 26, 2025 07:36 AM

சென்னை : 'அ.தி.மு.க., கோழைகள் வேண்டுமானால், பா.ஜ.,விற்கு பயந்து, அடிபணியலாம். ஆனால், தி.மு.க., அரசை அசைத்து பார்க்க முடியாது' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'டாஸ்மாக் விசாரணைக்கு பயந்து தான், 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளக்கூட்டணி
பா.ஜ.,வோடு நேரடி கூட்டணி இல்லாமல், கள்ளக்கூட்டணி காலத்தில் கூட, பா.ஜ.,வுக்கு பயந்த பயந்தாங்கொள்ளி தானே பழனிசாமி.
அ.தி.மு.க.,வின் தீர்மானங்களில் கூட மோடியையோ, மத்திய அரசையோ கண்டிக்காமல், வலியுறுத்துகிறோம் என்ற வார்த்தையை போட்டு தப்பித்த சூராதி சூரர் அல்லவா பழனிசாமி.
அவருக்கு மோடி என்றால் பயம்; அமித்ஷா என்றால் பயம்; அமலாக்க துறை என்றால் பயம்; சி.பி,ஐ., என்றால் பயம்; கவர்னர் பயம், ரெய்டு பயம், தேர்தல் ஆணையம் பயம், இரட்டை இலை சின்னம் பயம், இப்படி எல்லாவற்றுக்கும் பயந்து, பா.ஜ.,வோடு கூட்டணி சேர்ந்தவர் தான் பழனிசாமி.
புலிக்கு பயந்தவர்கள் எல்லாம், என் மீது படுங்கள் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஊருக்குள் புலி வந்ததும், எல்லாரும் ஓடினர்.
பெரிய வீரனை போல் பேசிய ஒருவன், 'என் மீது படுத்து கொள்ளுங்கள் நான் காப்பாற்றுகிறேன்' என்றானாம். அந்த புலிப்பாண்டி தான் பழனிசாமி.
சித்து விளையாட்டு
முதுகெலும்பில்லாத அ.தி.மு.க., கோழைகள் வேண்டுமானால், பா.ஜ., சித்து விளையாட்டிற்கு பயந்து, பா.ஜ.,வை ஆதரித்து அடிபணியலாம்.
ஆனால், ஒருக்காலமும் தி.மு.க., அரசை துரும்பளவு கூட அசைத்து பார்க்க முடியாது என்பதை, பயந்தாங்கொள்ளி பழனிசாமிக்கு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


