தி.மு.க., நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்ததால் பெற்றோர் அதிருப்தி
தி.மு.க., நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்ததால் பெற்றோர் அதிருப்தி
தி.மு.க., நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்ததால் பெற்றோர் அதிருப்தி
ADDED : ஜூன் 15, 2025 06:18 AM

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை, 'நான் முதல்வன்' திட்ட நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு தி.மு.க.,வினர் கேட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், மாணவர்களை நேற்று பள்ளிக்கு வரவழைத்தார்.
மாணவர்கள் வந்த நிலையில், அது, அரசின் நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி அல்ல என்றும், தி.மு.க., நகர இளைஞரணி சார்பில், 'திசை எங்கும் திராவிடம்' என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கம் மற்றும் புதிய இளைஞர்கள் இணையும் விழா என, தெரிந்தது.
இதனால், மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் திருப்பி அனுப்பினார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆடியோவில் பெற்றோர் கேள்விக்கு தலைமையாசிரியர், 'நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி நடப்பதாக கவுன்சிலர் தெரிவித்தார். விருப்பம் உள்ள மாணவர்களை வர சொன்னோம். காலையில் போஸ்டர் பார்த்த பின், அது அரசு நிகழ்ச்சி அல்ல என தெரிந்ததும், மாணவர்களை வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினேன். இனி இதுபோல தவறு நடக்காது. மாணவர்களை நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கவுன்சிலரின் கணவர் விஜயகுமார் தான் மாணவர்களை அனுப்புமாறு கூறினார்' என, கூறுகிறார்.
இது குறித்து அறிந்த பா.ஜ., - அ.தி.மு.க., -- ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.