Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

ADDED : ஜூலை 02, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்க்க, ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரப்பு பேச்சு நடத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில் தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க் கட்சிகளையும், ஒரே கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.

த.வெ.க.,வுக்கு, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் மட்டும் அல்லாமல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வர வேண்டிய ஓட்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும்.

எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க.,வை சேர்ப்பதற்கான முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டது. இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில் இருந்து முதல் கட்டமாக, விஜயின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.

தோற்பது உறுதி


அவர்கள் விஜயிடம் நேரடியாக பேச்சு நடத்துமாறு தெரிவித்தனர். அதற்கு பா.ஜ., தரப்பில் முற்சித்த போது, சாதகமான பதில் கிடைக்கவில்லை.

எனவே, விஜய் வந்தாலும், அவருக்கு உறுதியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும், சிறுபான்மையினர் சமூக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்காது; அதனால், விஜய் வருகை பா.ஜ.,வுக்கு பெரியளவில் உதவாது என, மேலிடத் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், விஜய் கூட்டணிக்கு வந்தால், தி.மு.க., தோற்பது உறுதி என, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள், மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர்களின் ஆலோசனைப்படி, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தரப்பில் இருந்து, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிக்கு வருமாறு விஜய் தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

'கட்சி துவக்குவது எளிது; அரசியலில் சாதுர்யமான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவில்லை எனில் தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும். நம்மை நம்பி வந்த கட்சியினருக்கு, அரசியலில் பதவிகள் கிடைக்காவிட்டால், அவர்கள் சோர்வடைவர். இதனால், கட்சி வளர்ச்சி பணி பாதிக்கப்படும்.

வெற்றி கிடைக்குமா?


ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனி கட்சியை துவக்கினார். போகும் இடமெல்லாம் தொண்டர்கள் குவிந்தனர்.

ஆனால், தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தோல்வி அடைந்த பின், கட்சியை நடத்த முடியாமல், காங்கிரசுடன் கட்சியை இணைத்து விட்டார்.

பவன் கல்யாணும் கட்சி துவங்கி, பல ஆண்டுகளுக்கு பின் துணை முதல்வராகி உள்ளார். அவர், கடந்த சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு இருந்தால், தற்போது கிடைத்திருக்கும் வெற்றி கிட்டியிருக்குமா என்று உறுதியாக கூற முடியாது. சரியான நேரத்தில், ஆந்திராவின் பெரிய கட்சியான தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தார்.

இதனால் அந்த கூட்டணி, அதற்கு முந்தைய தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்று, முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தியது.

இதேபோல், தமிழகத்திலும் தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரவும்' என, விஜய் தரப்புடன், பவன் கல்யாண் தரப்பு பேசி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us