6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2025 12:56 AM
சென்னை:பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில், ஊராட்சிக்கு 5,000 பனை விதைகள் வீதம், தமிழகம் முழுதும் 6.36 கோடி பனை விதைகள் நடவு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்புகள் சார்பில், ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தை, தமிழக அரசு, 2023ல் துவக்கியது.
நீர் நிலைகளின் கரையோரம், விதைகளை நடவு செய்வதன் வாயிலாக, கோடையில் நீர் இருப்பை உறுதி செய்வதும், பனை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களின், தயாரிப்புகளை ஊக்குவிப்பதும், திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ், கடந்த 2023ல், 14 மாவட்டங்களில், 65 லட்சம் பனை விதைகள்; கடந்த ஆண்டு 75 லட்சம் விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பாண்டு ஊராட்சிக்கு 5,000 பனை விதை வீதம், தமிழகம் முழுதும் உள்ள நீர் நிலைகள் மற்றும் கடற்கரையோரம், 6.36 கோடி பனை விதைகள் நடவு செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் தலைவர் ஹரிஹரன் கூறுகையில், ''அரசு தரப்பில், பனை விதை நடவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, பின் ஊராட்சிக்கு தலா 5,000 பனை விதைகள் வீதம் வழங்கப்படும்.
''பின், அங்குள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் உதவியுடன், பனை விதைகள் நடவு செய்யப்படும். நடவு செய்யப்படும் பனை விதைகள் விபரம், 'உதவி' செயலியில் பதிவேற்றப்பட்டு, ஜி.பி.எஸ்., உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படும்,'' என்றார்.