கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
ADDED : மே 25, 2025 05:55 AM

கோவை,: தென்மேற்கு பருவ மழை எதிர்கொள்ள தயாராக இருப்பது தொடர்பாக, மாவட்ட அளவில் அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது.
அதன்பின், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
மழை பாதிப்பு ஏற்பட்டால், மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மரங்கள் விழுந்தால் அறுத்தெடுக்க, தேவையான மெஷின்கள், பொக்லைன், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்கள் தயாராக உள்ளன.
வால்பாறை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில், அதிக மழைக்கு வாய்ப்பிருக்கிறது; 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. 80 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழு கோவையில் முகாமிட்டிருக்கிறது.
வால்பாறை அரசு கலை கல்லுாரியில் மீட்பு மையம் அமைத்திருக்கிறோம். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பகுதியில் போக்குவரத்து இடையூறு அல்லது நிலச்சரிவு ஏற்பட்டால், மீட்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வால்பாறை, அட்டக்கட்டி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் குழுக்கள் தயாராக உள்ளன.
ஆறுகள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, பவானி ஆற்றுப்பகுதிக்குச் செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1077 அல்லது, 0422 3206051 ஆகிய எண்ணுக்கு அழைக்கலாம்.
மாவட்ட அளவில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீர் வழங்கு வாய்க்கால் துார்வாரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது; 75 சதவீதம் முடிந்திருக்கிறது.
நகர்ப்புறத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
தண்ணீரை உடனுக்குடன் அகற்ற, ஜெனரேட்டர் வசதியுடன் கூடுதலாக, மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிக தண்ணீர் தேங்கும்போது, போக்குவரத்தை மாற்றியமைக்க, போலீசாருடன் மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவர்.
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் தடைபட்டாலோ அல்லது, தண்ணீர் தேங்கினாலோ, உதவி மையத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.