Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பு; அன்புமணியை அமைதியாக்க ராமதாஸ் திட்டம்

ADDED : செப் 20, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
சென்னை: பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராததால், கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என அறிவித்தனர். கடந்த ஆக., 9ம் தேதி அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு, அவரை பா.ம.க., தலைவராக அங்கீகரித்து கடிதம் அனுப்பி உள்ளது.

இதை ஏற்காத ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் முரளி சங்கர், எம்.எல்.ஏ., அருள், வழக்கறிஞர் அருள், சுவாமிநாதன் ஆகியோர், கடந்த 17ம் தேதி டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்தனர். பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை திரும்ப பெற வேண்டும். பா.ம.க., தலைமை அலுவலகமாக, தைலாபுரம் முகவரியை ஏற்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.

பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், அன்புமணியை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆவணங்களை அன்புமணி தரப்பு, கடந்த ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையிலேயே அன்புமணியை அங்கீகரித்ததாக, ராமதாஸ் தரப்பினரிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

இதை அடுத்து, பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல, ராமதாஸ் தரப்பு தயாராகி வருகிறது. இந்நிலையில், 'அன்புமணிக்கு பா.ஜ., மேலிடம் முழு ஆதரவளிப்பதால், அவரை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. எனவே, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினால், மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனின் ஆதரவு, அன்புமணிக்கு கிடைக்காமல் செய்து விடலாம்' என, ராமதாசுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திக்க, ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவு நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'அன்புமணியின் பின்னணியில் பா.ஜ., உள்ளது. ராமதாஸ் மீது பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டவர் பிரதமர் மோடி. பல தருணங்களில் அதை வெளிப்படுத்தி உள்ளார். மோடி அழைப்பின்படி, சில முறை அவரை ராமதாஸ் சந்தித்துள்ளார். எனவே, மோடியை சந்தித்தால், அன்புமணி தரப்பை அமைதியாக்கி விடலாம். எனவே தான், மோடியை சந்திக்க, ராமதாஸ் நேரம் கேட்டுள்ளார்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us