தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: 12 வாரங்களில் தீர்வு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: 12 வாரங்களில் தீர்வு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: 12 வாரங்களில் தீர்வு
ADDED : செப் 19, 2025 01:52 AM
சென்னை:தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, பள்ளி கல்வித்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் துறை இயக்குநர், கடந்த மார்ச்சில் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார்.
அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்க மாநில பொதுச்செயலர் பழனியப்பன் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குநர் அளித்த பரிந்துரைகளையும் பரிசீலிக்குமாறும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந் திரையன் முன் விசாரணைக்கு வந்தன.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும், தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரைகள் மீது, 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டார்.