15.57 லட்சம் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை ஒப்புதல்: ஒத்துழைப்பு தராமல் பாதியில் முடக்கும் வருவாய்துறை
15.57 லட்சம் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை ஒப்புதல்: ஒத்துழைப்பு தராமல் பாதியில் முடக்கும் வருவாய்துறை
15.57 லட்சம் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறை ஒப்புதல்: ஒத்துழைப்பு தராமல் பாதியில் முடக்கும் வருவாய்துறை

சென்னை: சொத்து விற்பனை பத்திரப்பதிவின் போது, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, 15.57 லட்சம் ஆவணங்களுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வருவாய் துறை காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, உட்பிரிவு அவசியம் இல்லாத முழு சொத்தும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும் நிலையில், பத்திரப்பதிவை அடிப்படையாக வைத்து, பட்டா மாறுதல் செய்யும் திட்டம், 2019ல் உருவாக்கப்பட்டது. இத்திட்டம், 2020 முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த முறையில், பத்திரப்பதிவின் போது, சொத்து விற்பவர், வாங்குவோர் தொடர்பான அடையாள ஆவணங்களையும், முந்தைய பட்டா விபரங்களையும் சரி பார்த்து, சார் பதிவாளர் உறுதி செய்தால் போதும். அந்த விபரம், பதிவுத்துறையின், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக, வருவாய் துறையின் தமிழ்நிலம் தகவல் தொகுப்புக்கு சென்று விடும். அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறி விடும்.
ஆனால், இப்பணிகளை பாதியில் முடக்கும் நோக்கத்திலேயே, வருவாய் துறை அலுவலர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆண்டுக்கு ஆயிரம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்தால், அதில், 500க்கும் குறைவான விண்ணப்பங்களுக்கு மட்டுமே, வருவாய் துறையில் பட்டா மாறுதல் நடக்கிறது. ஆதாயம் பெறுவதற்காக, ஏதேனும் காரணங்களை கூறி, விண்ணப்பங்களை வருவாய் துறை அலுவலர்கள் முடக்குவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2024ல், 15.57 லட்சம் பத்திரங்கள் அடிப்படையில், பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில், 1.02 லட்சம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு, சார் பதிவாளர் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும், இவற்றில் பாதி அளவுக்கான விண்ணப்பங்களுக்கு மட்டுமே, பட்டா மாறுதல் நடந்துள்ளதாக தெரிகிறது. அனைத்து விபரங்களையும் சார் பதிவாளர் சரிபார்த்து உறுதிப்படுத்திய நிலையில், வருவாய் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அத்துடன் பட்டா மாறுதல் முடிக்கப்பட்ட கோப்புகள் எண்ணிக்கையை வெளியிடவும் வருவாய் துறை மறுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
***