ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்து முடக்கம்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்து முடக்கம்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்து முடக்கம்
ADDED : செப் 24, 2025 03:36 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, மறைந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின், 2.56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி நிரந்த வைப்பு தொகையை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தியானேஸ்வரன், 1996ல், 'டாமின்' என அழைக்கப்படும், தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
அப்போது அவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து, குடும்ப உறுப்பினர் மற்றும் தன் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, 1991 - 1996ம் ஆண்டு காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக, 7.34 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்தது. சி.பி.ஐ., விசாரணையை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், 2017ல் விசாரணையை துவக்கினர்.
அப்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தியானேஸ்வரன், ஷில்பி கிரி கன்ஷ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நமச்சிவாயம் அறக்கட்டளை பெயரில், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், தியானேஸ்வரன் காலமான நிலையில், தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்., 28ம் தேதி, சென்னை மற்றும் பிற இடங்களில், தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, சொந்தமான இடங்களில், சோதனை நடத்தி, 1.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து, நேற்று, தியானேஸ்வரனுக்கு சொந்தமான, 1.7 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16 வகையான அசையா சொத்துக்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கில், நிரந்த வைப்பு தொகையாக இருந்த, 86.24 லட்சம் ரூபாய் என, மொத்தம், 2.56 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்தனர்.