ஏழு மாவட்டங்களில் சாலையோர வசதி மையம்
ஏழு மாவட்டங்களில் சாலையோர வசதி மையம்
ஏழு மாவட்டங்களில் சாலையோர வசதி மையம்
ADDED : செப் 26, 2025 02:36 AM
சென்னை:ஏழு மாவட்டங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்காக, சாலையோர வசதி மையங்களை, தனியார் பங்களிப்புடன், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.
மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தவும், வாகன ஓட்டிகள், பயணியர்களுக்கு வசதிகளை மேம்படுத்தவும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள், படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. அவற்றில், வாகன ஓட்டிகள், பயணியர் வசதிக்காக, சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக முதல் கட்டமாக ஏழு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சாலையோர வசதி மையத்தில், டிரைவர்களுக்கு ஓய்வறை, எரி பொருள் மற்றும் காற்று நிரப்பும் மையங்கள், 'சார்ஜிங்' மையங்கள், உணவகம், கழிவறை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, வாகனங்களுக்கான அவசரகால மெக்கானிக் சேவை, முதலுதவி சிகிச்சை மையம், தேநீர் கடை போன்றவை ஏற்படுத்தப்பட உளளன.
இது குறித்து, மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலையோர வசதி மையங்கள், முதல்கட்டமாக, விழுப்புரம் - அய்யன் கோவில்பட்டு, திருப்பூர் - பழங்கரை, திருவள்ளூர் - திருப்பாச்சூர், திருப்பத்துார் - கலந்தரா, சேலம் - காரிப்பட்டி, திண்டுக்கல் - புதுச்சத்திரம், திருவண்ணாமலை - கீழ்மட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தேவையான அரசு நிலம், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்படும். அந்த இடத்தில், கட்டமைப்புகளை ஏற்படுத்தி, சாலையோர வசதி மையங்களை அமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை, மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு லீஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என, விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.