மேலும் எட்டு துறைகளில் ஆன்லைனில் ஆர்.டி.ஐ., மனு
மேலும் எட்டு துறைகளில் ஆன்லைனில் ஆர்.டி.ஐ., மனு
மேலும் எட்டு துறைகளில் ஆன்லைனில் ஆர்.டி.ஐ., மனு
ADDED : செப் 24, 2025 03:40 AM
சென்னை:தமிழக அரசின் எட்டு துறைகள், தகவல் அறியும் உரிமை சட்டமான, ஆர்.டி.ஐ., மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பெறும் வசதிக்கு மாற உள்ளன.
அரசு அலுவலகங்களின் நிர்வாக முடிவுகள் தொடர்பான விபரங்களை, பொது மக்கள் அறிந்து கொள்ள, தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், பொது தகவல் அதிகாரியாக ஒருவர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தகவல்கள் பெற, எழுத்துப்பூர்வ மனுக்களை, தபால் வாயிலாக அனுப்பி வந்தனர். தபால்கள் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதங்களை குறைக்க, 'ஆன்லைன்' வசதி துவக்கப்பட்டது.
இதன்படி, பொது மக்கள், 'ஆன்லைன்' முறையில், தங்கள் மனுக்களை பதிவு செய்யலாம். இதில், முதலாவது மேல் முறையீட்டு மனுவையும், 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யலாம்.
இதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில், பல்வேறு அரசு துறைகள் இணையாமல் உள்ளன. தமிழகத்தில், பொதுப்பணித்துறை, நிதி, சட்டம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட, 11 துறைகள், ஆர்.டி.ஐ., மனுக்களை வாங்குவதில், 'ஆன்லைன்' முறைக்கு மாறியுள்ளன.
அத்துடன், 38 தலைமைச் செயலக துறைகள், 38 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் ஆர்.டி.ஐ., மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பெற துவங்கி உள்ளன. இத்துறைகளை சேர்ந்த, 3,868 பொது தகவல் அலுவலர்கள், ஆன்லைன் வழியே மனுக்களை கையாள்கின்றனர்.
எனினும், பெரும்பாலான துறைகள், ஆன்லைனுக்கு மாறாதது தொடர்பாக புகார் எழுந்ததால், இது குறித்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாணைக்கு எடுத்தது. நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த நிலையில், 'ஆன்லைன்' முறைக்கு மாறாத துறைகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய உள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'ஆன்லைன்' முறையில், ஆர்.டி.ஐ., மனுக்கள் பெறும் வசதியை அமல்படுத்த, அனைத்து துறைகளுக்கும் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட சில துறைகள், இதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் வழக்கால், ஆன்லைன் முறைக்கு மாறாத துறைகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய், ஊரக வளர்ச்சி துறை, உணவு மற்றும் கூட்டுறவு, பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு, உள்துறை, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு ஆகிய எட்டு துறைகள், உடனடியாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து துறைகளும் இணைந்தால், 30,000 பொது தகவல் அலுவலர்கள், 'ஆன்லைன்' வசதியை பயன்படுத்தும் நிலை ஏற்படும். எனவே, இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.