100 நாள் வேலை திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் சமூக தணிக்கையில் அதிர்ச்சி தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் சமூக தணிக்கையில் அதிர்ச்சி தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் சமூக தணிக்கையில் அதிர்ச்சி தகவல்
ADDED : செப் 25, 2025 01:15 AM
சென்னை:நாடு முழுதும் நடப்பாண்டில், 100 நாள் வேலை திட்டத்தில், 110 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக, சமூக தணிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை உறுதி செய்வதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது. இதில் வேலை செய்யாமலேயே சம்பளம் கொடுக்கப்பட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, சமூக தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக தணிக்கை விபரம்:
நுாறு நாள் வேலை திட்டத்தில், நாடு முழுதும் நடப்பாண்டில் மட்டும், 110 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக முறைகேடுகள் நடந்திருப்பது, சமூக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,470 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட சமூக தணிக்கையில் நடப்பாண்டில், 26.57 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020 - -21 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில், நாடு முழுதும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கும், தமிழகத்தில், 87 கோடி ரூபாய் அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடு செய்யப்பட்ட நிதியில், தமிழகத்தில் நடப்பாண்டில், 1.39 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், 38 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. பணிக்கு வராதவர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணி நாட்கள் அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டோரை
தி.மு.க., அரசு காப்பாற்ற முயற்சி
நுாறு நாள் வேலை திட்டத்தில், நடப்பாண்டில் தமிழகத்தில், 26.57 கோடி ரூபாயும், கடந்த ஆறு ஆண்டுகளில், 87 கோடி ரூபாயும் ஊழல் நடந்துள்ளது. இதில் நடப்பாண்டில் 1.39 கோடி ரூபாயும், கடந்த ஆறு ஆண்டுகளில், 38 கோடி ரூபாயும் மட்டுமே திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., அரசு ஊழலுக்கு துணை போவதையே இது காட்டுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவது கடினம் அல்ல. ஆனால், தி.மு.க.,வின் கடைநிலை நிர்வாகிகள் ஊழல் செய்வதற்கான திட்டமாக, இதை மாற்றி வைத்துள்ளனர். அதனால்தான் ஊழல் தொடர்கிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, தி.மு.க., அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது.
எனவே, இந்த ஊழல் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில், உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்.