Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!

ADDED : செப் 18, 2025 12:21 PM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் மோட்டார் சைக்கிளுடன் தமது காரில் மோதிய வாலிபரை, காரில் ஏற்றி இழுத்துச் சென்ற போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜனின், 59, வீடியோ வைரலானது. பின்னர் காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்திரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

அவர் நேற்றிரவு பணி முடிந்து திருநெல்வேலி டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம்

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியது.

சஸ்பெண்ட்


தற்போது சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்தது. அவர் மது போதையில் வந்து ஒழுங்கினமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்திரவிட்டார். காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us