Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பிரதமரின் 'இ - டிரைவ்' திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

பிரதமரின் 'இ - டிரைவ்' திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

பிரதமரின் 'இ - டிரைவ்' திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

பிரதமரின் 'இ - டிரைவ்' திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

UPDATED : ஜூன் 24, 2025 08:00 AMADDED : ஜூன் 24, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் மின் வாகனங்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, பிரதமரின், 'இ- டிரைவ்' திட்ட நிதியை பெறாமல், தமிழகம் ஓராண்டாக காத்திருக்கிறது.

மாநிலங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார பஸ்களை இயக்கவும், அதற்கான, 'சார்ஜிங்' மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பிரதமரின், 'இ- - டிரைவ்' திட்டத்தை, 2024 இறுதியில் இருந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுதும், அடுத்த ஆண்டுக்குள் மின்சார பஸ்கள் இயக்க, 11,000 கோடி ரூபாயும், சார்ஜிங் வசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநில அரசுகள் தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, இந்நிதியை பெற்று, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் இயக்கம் பெயரளவிலேயே இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்ட, 40 முக்கிய நகரங்களின் பட்டியலில், சென்னை, மதுரை, கோவை இடம் பெற்றுள்ளன. முக்கிய வழித்தடங்கள் பட்டியலில், சென்னை - பெங்களூரு, சென்னை - விழுப்புரம், கோவை - சேலம், கோவை - பெங்களூரு, கோவை - சென்னை, சென்னை - நாகர்கோவில், திண்டுக்கல் - திருநெல்வேலி, சென்னை - ஐதராபாத், சென்னை - விஜயவாடா போன்றவையும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பிரதமரின், 'இ - டிரைவ்' திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான நிதியை பெறவும் தமிழக அரசு முயற்சிக்கவில்லை.

இது குறித்து, மின்சார பஸ்களை இயக்கி வரும் தனியார் பஸ் நிறுவனர் சுனீல்குமார் கூறியதாவது: எரிபொருள் செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால செலவும் குறைவு என்பதால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்களும், பஸ்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

ஆனால், தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை. மின்சார பஸ்களும், இதர மின்சார வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படாததற்கு, சார்ஜிங் வசதி உள்ளிட்ட போதிய கட்டமைப்புகள் இல்லாததே முக்கிய காரணம்.

வாகன எண்ணிக்கை, மக்கள் தொகை அடிப்படையில், பிரதமர் திட்டத்தில் ஒதுக்கிய மொத்த நிதியில், தமிழகத்துக்கு, 2,000 கோடி ரூபாய் வரை பெற்று இருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளை, தமிழக அரசு முழு வீச்சில் எடுக்கவில்லை.

தமிழகத்தில் நாங்கள் மின்சார பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். இதற்கான கட்டமைப்பு வசதிகள் எங்கே செய்யப் போகின்றனர்; எவ்வளவு இடங்களில் சார்ஜிங் வசதி ஏற்படுத்த போகிறார்கள்? எனவே, மின்சார பஸ்கள், வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அதுபோல், 'சார்ஜிங்' கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் நிதி பெறுவதற்கு முன்பே, உலக வங்கி நிதி உதவியுடன், மின்சார பஸ்கள் இயக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. எனவே, 100க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும், பிரதமரின் இ - டிரைவ் திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மின்சார வாகனங்களுக்கான திட்டங்களை செயல்படுத்த, தனி நிறுவனமும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது.
விரைவில் தன் பணியை, இந்நிறுவனம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டில்லி 'டாப்'

தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக, டில்லி 3,020; மஹாராஷ்டிரா - 2,923; கர்நாடகா - 1833 என, மின்சார வாகனங்களை இயக்கி வருகின்றன. தமிழக்தில், 131 மின்சார பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னையில் முதற்கட்டமாக, 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என, 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஜெர்மன் வங்கி உதவியுடன், இந்த பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிதது.
ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும், 500 பஸ்கள் வாங்கப்படவில்லை. சென்னையில் வியாசர்பாடி உட்பட பல்வேறு பணிமனைகளில், மின்சார பஸ்களுக்கான, 'சார்ஜிங்' கட்டமைப்பில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதால், பஸ் சேவை துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us