காசநோய் குறித்த விழிப்புணர்வு இல்லை; தமிழக கவர்னர் ரவி கவலை
காசநோய் குறித்த விழிப்புணர்வு இல்லை; தமிழக கவர்னர் ரவி கவலை
காசநோய் குறித்த விழிப்புணர்வு இல்லை; தமிழக கவர்னர் ரவி கவலை
ADDED : மார் 25, 2025 05:11 AM

சென்னை : ''இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. இவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது; ஆனால், காச நோய் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை,'' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த உலக காசநோய் தின விழாவில், அவர் பேசியதாவது:
இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், காசநோயை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
பாதிப்பு
அதன் பலனாக நோய் குறைய துவங்கி உள்ளது. எனினும், இலக்கை முழுமையாக அடைய முடியவில்லை. காச நோய் அதிகமாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது.
நம் நாட்டில் 25 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமானோர் ஏழைகள் தான்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், பலருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றுக்கான மருந்துகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. ஆனால், காச நோய் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்நோய் ஒருவர் வாழ்க்கையையும், குடும்பத்தையும் அழித்து விடுகிறது.
காச நோயால் ஆண்டுக்கு, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். இந்நோய் குணப்படுத்தக் கூடியதே. நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் தற்போது உள்ளன.
நம் நாட்டில் குக்கிராமங்கள், மலைப்பகுதிகளில், 2.5 லட்சம் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.
ஆரோக்கிய உணவு
அங்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 60 சதவீத மக்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை இருந்தது.
மத்திய அரசு அதை மாற்றியுள்ளது. காசநோய் பாதிக்க மக்களை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், விஞ்ஞானி கரிகாலன், நடிகர் பார்த்திபன், டாக்டர் இருதயசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.