Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; 'கோ கலர்ஸ்' கடைகளில் ஐ.டி., 'ரெய்டு'

வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; 'கோ கலர்ஸ்' கடைகளில் ஐ.டி., 'ரெய்டு'

வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; 'கோ கலர்ஸ்' கடைகளில் ஐ.டி., 'ரெய்டு'

வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; 'கோ கலர்ஸ்' கடைகளில் ஐ.டி., 'ரெய்டு'

ADDED : அக் 08, 2025 08:50 AM


Google News
Latest Tamil News
சென்னை: பல்வேறு மாநிலங்களில் செயல்படும், 'கோ கலர்ஸ்' நிறுவன ஆயத்த ஆடை விற்பனை கடைகளில், நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

'கோ பேஷன் இந்தியா' என்ற நிறுவனம், 'கோ கலர்ஸ்' என்ற பெயரில், ஜவுளி கடைகள் துவங்கி, பெண்களுக்கான பிரத்யேக ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு, சென்னை, புனே, பெங்களூரு, டில்லி, கொல்கட்டா, ஹைதராபாத், மும்பை என, 700க்கும் மேற்பட்ட ஷோ ரூம்கள் உள்ளன.

தமிழகத்தில் மட்டும், 115க்கும் மேற்பட்ட கடைகள், திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட, பல நகரங்களில் இயங்குகின்றன. இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், தவறான கணக்கு காட்டி லாபத்தை வேறு கணக்கில் மாற்றியதாகவும், வருமான வரித் துறைக்கு புகார் சென்றது.

அதன் அடிப்படையில், இந்நிறுவனம் தொடர்புடைய 'கோ கலர்ஸ்' கடைகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, ஆர்.ஏ.புரத்தில் உள்ள முக்கிய பங்குதாரர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரதான ஷோரூம், வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர்.

நேற்று காலை 10:00 மணி முதல், இரவு வரை, கோவை, ஈரோடு, திருச்சி உட்பட, 30 நகரங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: சில இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத தங்கம் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த, 'டிஜிட்டல்' பரிவர்த்தணை கணக்கு விபரத்தின் அடிப் படையில் விசாரணை செய்கிறோம்.

வருமான வரி தாக்கலில் போதுமான வருவாய் இல்லை என தெரிவித்து, வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கில் வராத பணத்தை, 'கிரிப்டோ' கரன்சி களாக மாற்றி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிறுவனம் தொடர்புடையவர்கள் சிலர், வருவாயை பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீடாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us