டீக்கடை பெஞ்ச்: மோசடி நிறுவன சொத்து ஏலத்தில் முறைகேடு!
டீக்கடை பெஞ்ச்: மோசடி நிறுவன சொத்து ஏலத்தில் முறைகேடு!
டீக்கடை பெஞ்ச்: மோசடி நிறுவன சொத்து ஏலத்தில் முறைகேடு!
ADDED : ஜன 28, 2024 01:02 AM

'வணிகவரி துறை ஊழியர்கள் எல்லாம் புலம்புதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''அவங்களுக்கு என்னங்க பிரச்னை...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை வணிகவரி துறையில உதவியாளர் ஒருத்தரை, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதா சொல்லி, சிவகங்கைக்கு மாத்திட்டாவ வே... ஆனா, பைல்களை தயாரிக்கிறது மட்டும் தான் அவரது வேலையாம்...
''அதை பரிசீலனை பண்ணி, கையெழுத்து போட்டு நடவடிக்கை எடுக்கிறது எல்லாம் உயர் அதிகாரிகள் தானே... உதவியாளர் தயாரிச்ச பைல்ல மேற்பார்வையாளர், உதவி கமிஷனர், துணை கமிஷனர்னு பலரும் கையெழுத்து போட்டிருக்காவ வே...
''ஆனா, உதவியாளருக்கு மட்டும், '17 பி சார்ஜ் மெமோ' கொடுத்து, இடமாற்றம் செஞ்சுட்டாவ... அவரும், கமிஷனர் வரை முறையிட்டும் பலன் இல்ல வே...
''அதே நேரம், அந்த பைல்கள்ல கையெழுத்திட்ட உயரதிகாரிகளுக்கு, பதவி உயர்வோட இடமாறுதல் போட்டிருக்காவ... இதனால, ஊழியர்கள் எல்லாம் குமுறிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எங்க சம்பளம் வாங்குறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சேலம், ஆட்டையாம்பட்டி மற்றும் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களை டிச., 31ல், மாநகர போலீஸ்ல இணைச்சாங்க... இங்க இருந்த பெண் இன்ஸ்பெக்டரை, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டிக்கும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பெண் இன்ஸ்பெக்டரை ஆட்டையாம்பட்டிக்கும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இடமாற்றம் பண்ணிட்டாங்க பா...
''அதே மாதிரி, ஆட்டையாம்பட்டியில இருக்கிற 15 போலீசாருக்கும், பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் போட்டாங்க... ஆனா, ஆட்டையாம்பட்டி ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டவங்க, இன்னும் வந்து பொறுப்பேற்காம இருப்பதால, இவங்க எல்லாம், 'ரிலீவ்' ஆகலைங்க...
''இவங்க எல்லாம் புது இடத்துக்கு போனா தான், சம்பளம் போட முடியும்கிறதால, வர்ற மாசம் சம்பளத்தை எங்க வாங்குறதுன்னு தெரியாம, ஆட்டையாம்பட்டி போலீசார் தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடறதுலயே மோசடி பண்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவையில் செயல்பட்ட, 'பைன் பியூச்சர்' நிதி நிறுவன மோசடி வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையா சொத்துக்களை ஏலம் விடறாளோல்லியோ... திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம் கிராமங்களில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை ஏலம் விட்டதுல மோசடி நடந்திருக்கறதா, முதலீட்டாளர்கள் எல்லாம் புகார் சொல்றா ஓய்...
''அதாவது, நிறுவனத்தை சேர்ந்தவாளும், ஏலம் விடற வருவாய் துறை அதிகாரிகளும் கூட்டணி போட்டுண்டு, கம்மியான விலைக்கு நிலங்களை வித்திருக்கா... சந்தை மதிப்புல ஏக்கர், 60 லட்சம் ரூபாய்க்கு போற நிலங்களை, அதை விட பாதிக்கும் குறைவான ஏலத்தொகை நிர்ணயம் பண்ணி வித்துண்டா ஓய்...
''நிலங்களை வாங்கறவாளிடம், கணிசமான தொகையை கறந்திருக்கா... இதனால, முதலீட்டாளருக்கு சேர வேண்டிய தொகை சரியா வரல... இப்ப, 'இந்த ஏலங்களை ரத்து பண்ணி, முறைகேடு குறித்து விசாரணை நடத்தணும்'னு பாதிக்கப்பட்டவா ஐகோர்ட்ல வழக்கு தொடர தயாராயிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய பெஞ்ச் கலைந்தது.
''துறைகள் இணைப்புக்கு சம்மதிக்க மாட்டேங்கிறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையை ஒருங்கிணைத்து, மத்திய, மாநில அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கு முழு அளவில் கிடைக்கிறதுக்கான திட்டத்தை மாநில அரசு வகுத்தது... ஆனா, துறைகள் இணைப்புக்கு, தோட்டக்கலை துறையினர் முட்டுக்கட்டை போடுறாங்க பா...
''துறைகளை இணைச்சுட்டா, தோட்டக்கலை துறையில, அதிகாரிகள் பணியிடங்கள் குறைஞ்சிடும்கிற அச்சம் தான் இதுக்கு காரணம்...
''இதுக்கு ஏத்த மாதிரி, தி.மு.க., ஆட்சிக்கு வந்த ரெண்டே முக்கால் வருஷத்துல, வேளாண் துறையில மூணு இயக்குனர்களை மாத்திட்டாங்க... அதே நேரம், தோட்டக்கலை துறையில, ரெண்டரை வருஷமா இயக்குனரை மாத்தவே இல்ல பா...
''இதனால, 'தோட்டக்கலை அதிகாரிகள், மேலிடத்துல செல்வாக்கா இருக்கிறதால, சுதந்திரமா பணிபுரியுறாங்க... நாங்க தான் பந்தாடப்படுறோம்'னு வேளாண் துறையினர் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இது சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''வேளாண் துறையில, செயலருக்கு அடுத்து இயக்குனர் பதவி முக்கியமானது... திட்டங்கள் செயலாக்கம், அலுவலர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல அதிகாரங்கள் இயக்குனர் பதவிக்கு இருக்கு ஓய்...
''வேளாண் துறை இயக்குனரா இருந்த சுப்பிரமணியனை சமீபத்துல மாத்திண்டதால, இப்ப அந்த பதவி காலியா இருக்கு... தோட்டக்கலை இயக்குனரா இருக்கற பிருந்தாதேவி, ரெண்டரை வருஷத்துக்கும் மேலா இந்த பதவியில இருக்காங்க ஓய்...
''லோக்சபா தேர்தல் வர்றதால, நீண்ட காலமா ஒரே பதவியில இருக்கறவாளை மாத்தணும்கறது விதி... அந்த அடிப்படையில, பிருந்தாதேவியை மாற்ற அரசு முடிவெடுத்திருக்கு ஓய்...
''அவங்களுக்கு வேளாண் துறை இயக்குனர் பதவியை வாங்கி தர, துறையின் முக்கிய புள்ளி முயற்சி பண்றார்... அது கிடைக்காத பட்சத்துல, அவங்களை வேலுார் மாவட்ட கலெக்டராக்கிட்டு, அங்க கலெக்டரா இருக்கற குமரவேல் பாண்டியனை வேளாண் துறை இயக்குனர் பதவிக்கு அழைச்சுட்டு வரவும் முயற்சிகள் நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாநகராட்சி அதிகாரியை மாத்தணும்னு, போர்க்கொடி துாக்க ஆரம்பிச்சிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும்...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை மாநகராட்சி, ஆலந்துார் மண்டலம், மற்ற மண்டலங்களை விட அடுக்குமாடி குடியிருப்புகளும், கட்டடங்களும் அதிகமாகிட்டு வர்ற மண்டலமா இருக்குதுங்க... கட்டட அனுமதி வழங்கும் பிரிவுல பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும், அதே மண்டலத்தை சேர்ந்த முக்கியப் புள்ளிக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குதுங்க...
''ஆளுங்கட்சி தரப்புல, முழு தகுதியுடன் பரிந்துரைக்கப்படுற குடியிருப்பு திட்டங்களுக்கான விண்ணப்பங்களை கூட, ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கிடப்புல போட்டுடுறாருங்க...
''அதே சமயம், அ.தி.மு.க., தரப்பினர் தரும் விண்ணப்பங்களுக்கு மட்டும், விழுந்தடிச்சு உடனுக்குடன் ஒப்புதல் கொடுத்துடுறாராம்... இதனால, அந்த அதிகாரியை மாத்தணும்னு, மாநகராட்சி மேலிடத்திற்கு ஆளுங்கட்சி புள்ளிகள் கோரிக்கை வைச்சிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.