Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

70 நிமிடங்களில் ஆறு செயின் பறிப்பு சம்பவங்கள்!

UPDATED : மார் 26, 2025 10:16 PMADDED : மார் 26, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் நேற்று காலை, 6:00 முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் தொடர்புடைய ஈரானிய கொள்ளையர் இருவர், விமானத்தில் தப்ப முயன்ற போது, கைது செய்யப்பட்டனர்.

* சென்னை சைதாப்பேட்டையில் இட்லி கடை நடத்தி வருபவர் இந்திரா, 52. இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டருகே உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி உள்ளார். அவரிடம் முகவரி கேட்பது போல, இருசக்கர வாகனத்தில், ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், 2 சவரன் செயினை பறித்து தப்பினர்

* பெசன்ட் நகரை சேர்ந்தவர் அம்புஜம்மாள், 60. இவர் நேற்று காலை, 6:30 மணிக்கு, அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். இவரிடமும் முகவரி கேட்பது போல, மர்ம நபர்கள், 3 சவரன் செயினை பறித்து தப்பினர்

* அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், 56, நேற்று காலை, 6:45 மணியளவில் நடைபயிற்சி சென்றார். அவரிடமும் மர்ம நபர்கள், 5 சவரன் செயினை பறித்தனர்

* அதேபோல, நேற்று காலை, 7:00 மணியளவில், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில், எம்.ஆர்.சி., திடல் அருகே, நடந்து சென்ற நிர்மலா, 60 என்பவரிடமும், 7 சவரன் செயினை பறித்துச் சென்றனர்

* வேளச்சேரி டான்சி நகரில் நேற்று காலை, 7:10 மணியளவில் நடைபயிற்சி சென்ற விஜயா, 70 என்பவரிடம், 2 சவரன் செயினை பறித்தனர்

* அதேநேரத்தில், வேளச்சேரி விஜயநகர் வடக்கு விரிவாக்கம் பகுதியில், முருகம்மாள், 60 என்பவரிடமும், 3 சவரன் செயினை பறித்தனர்.

அனைத்து சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளன. அதுவும், ஒரு மணி, 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

முதல் சம்பவமாக, சைதாப்பேட்டையில் இந்திராவிடம் செயின் பறிப்பு நடந்தது தொடர்பாக, காலை, 6:30 மணிக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போதே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், 'வாக்கி டாக்கி' வாயிலாக, போலீசாரை உஷார்படுத்தினார். செயின் பறிப்பு நடந்த விதத்தை ஆய்வு செய்ததில், வடமாநில கொள்ளையரின் கைவரிசை என்று தெரியவந்ததால், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி, தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, செயின் பறிப்பு கொள்ளையர்கள், கடைசியாக வேளச்சேரியில் தான் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் வடமாநில கொள்ளையராக இருந்தால், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். பஸ்சில் ஆந்திராவுக்கு தப்பிச் செல்லலாம். இதனால், ரயில், பஸ் நிலையங்களில் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டனர்.

'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் விமான நிலையம் நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனால், விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற, 'போர்டிங் பாஸ்' வாங்கும் நபர்கள் குறித்து நன்கு விசாரிக்குமாறு, விமான நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி, மும்பை மற்றும் டில்லிக்கு செல்ல முயன்ற, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, விமான நிறுவன ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, சென்னை மாநகர தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனிப்படை போலீசார், 'இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா' நிறுவன விமானங்களில், டில்லி மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் மும்பை செல்ல முயன்ற, உ.பி.,யை சேர்ந்த மார்சிங் அம்ஜத் ஈரானி, 26; ஜாபர் ஈரானி, 26 ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில் ஒருவர் விமானத்திலேயே ஏறி விட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உதவியுடன் கீழே இறக்கியதாக, போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் ஈரானிய கொள்ளையர்கள் என்பதும், சென்னையில் வயதான பெண்களை குறி வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில், ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து ரயிலில் தப்ப முயன்ற சல்மான் உசேன் என்பவரை பிடித்துள்ளனர்.

காட்டிக்கொடுத்த காலணி


கொள்ளையர்கள் விமான நிலையம் அருகே சென்றதும் உடை மாற்றி உள்ளனர். ஆனால், காலணியை மாற்ற மறந்து விட்டனர். செயின் பறிப்பு நடந்த இடத்தில், 'சிசிடிவி கேமரா'வில் பதிவாகி இருந்த காலணியும், அவர்கள் அணிந்து இருந்ததும் ஒரே மாதிரி இருந்ததால், அவர்களை பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருந்தது. தற்போது கைதாகி உள்ள ஈரானிய கொள்ளையர்கள், இதற்கு முன் சென்னை புறநகர் பகுதியில் நான்கு முறை செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



யார் இவர்கள்?


கடந்த, 1970களில் ஈரான் நாட்டில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அவர்களின் வாரிசுகள், ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்துார், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். தோற்றத்தில் ராணுவ வீரர்கள் போல இருப்பர். கொள்ளையடிப்பது தான் இவர்களின் பிரதான தொழில். இதனால், இவர்களை ஈரானிய கொள்ளையர் என, போலீசார் அழைக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us