Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: இபிஎஸ்.,

UPDATED : அக் 10, 2025 10:31 AMADDED : அக் 10, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நாமக்கல்: ''தமிழகம் முழுதும் கருணாநிதி பெயரை வைப்பதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டு >உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

சட்டசபை தேர்தலுக்காக, தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று இரவு, நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில், நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கின்றனர். வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிப்பதற்குள், மதுரை மாவட்டம் அமைச்சியாபுரத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ளனர்.

பாதுகாப்பு

இதை கண்டுபிடித்து தீர்க்க முதல்வர் ஸ்டாலினுக்கு திறமையில்லை. நெல்லை மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் கொலையில் இன்னும் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை. சென்னையில், ஆம்ஸ்ட்ராங்கை ரவுடிகள் வெட்டிக்கொன்றனர். குற்றவாளிகள் சுதந்திரமாக மக்களை வெட்டிச்சாய்க்கும் நிலை நீடிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதல் குற்றவாளி, இறந்து விட்டதாக செய்தி வருகிறது. ஏற்கனவே சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்து விட்டனர். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

கரூரில் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிர்களை இழந்திருக்க மாட்டோம். அ.தி.மு.க., ஆட்சியில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தோம். எங்காவது இதுபோன்ற நிகழ்வு நடந்ததா? இப்போது, பொதுக்கூட்டங்களை கூட, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்த வேண்டி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இருமல் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் மருந்தை சாப்பிட்டு, ம.பி., மாநிலத்தில் 20 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

ஆனால், தி.மு.க., அரசின் சுகாதாரத்துறைக்கு இப்படி ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இருப்பதே தெரியவில்லை. அங்குள்ள காவல்துறை, இங்கு வந்து மருந்து கம்பெனியினரை கைது செய்த பின் தான் இந்த அரசுக்கு தெரிகிறது. தமிழகத்தில் தெருக்களின் பெயர்களை மாற்ற அறிவிப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே, இந்த பிரச்னைக்காகத்தான் அரசு போக்குவரத்து கழக பெயர் எல்லாம் எடுக்கப்பட்டது. மாவட்டத்துக்கு சூட்டப்பட்ட பெயர் எல்லாம் நீக்கப்பட்டது. மீண்டும் பிரச்னையை ஸ்டாலின் உருவாக்குகிறார்.

அரசாணை

ஜாதி பெயரில் தெருக்கள் இருக்கக் கூடாது என்பது நல்லது தான். ஆனால், கருணாநிதி பெயரை வைக்க முயற்சி செய்கிறீர்கள். இதுதான் தவறு. தன் அப்பா பெயரை வைக்கத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் த.வெ.க., கொடிகள்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று முன்தினம் குமாரபாளையம் கூட்டத்தில் பேசியபோது நடிகர் விஜயின் த.வெ.க., கட்சி கொடிகள் பறந்தன. அதைப் பார்த்ததும், 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது' என பழனிசாமி பேசினார். இந்நிலையில், நேற்று மாலை நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையில் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்திலும், பழனிசாமியின் பிரசார வாகனத்தை சுற்றிலும், அ.தி.மு.க., கொடிகளுடன், த.வெ.க., கொடிகளும் அதிகமாக காணப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us