Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்

ADDED : அக் 08, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' கஞ்சா வைத்திருந்ததாக எனது மகன் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் தாக்கியதில் வாயில் ரத்தம் வருகிறது. காலில் காயம் பட்டுள்ளது,'' என பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜ நிர்வாகி வேலூர் இப்ராஹிம். அவர் அக்கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.

இந்நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அவரது மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து வேலூர் இப்ராஹிம் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: என்னை அடக்குவதற்கு அவர்கள் கையில் எடுத்திருப்பது என் குடும்பத்தின் மீதான தாக்குதல். என் மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் படிக்கப்போகிறார் என்ற தகவல் தெரிந்தும் போலீசார் கஞ்சா வழக்கு என பொய் வழக்கு போட்டனர். அது நீதிமன்றத்தில் செல்லாது ஜாமினில் வெளியே வந்துவிடுவார் என்ற உண்மை தெரிந்து உடனேயே காலையிலிருந்து ஒவ்வொரு விஷயமாக ஊடகத்திற்கு சொல்லி வந்தனர்.

பிறகு ஊடகத்திற்கு சொல்லாமல், வழக்கறிஞருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலே இருந்து ஒரு உத்தரவு வந்தது என்ற விஷயத்தை கையில் வைத்துக் கொண்டு போதைப் பொருள் வைத்திருந்தார் என்பது போன்று வழக்கு தொடுத்தனர் . எனது மகனை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். போலீசார் தாக்குகின்றனர். போலீசார் தாக்கியதில் வாயில் இருந்து ரத்தம் வருகிறது.

நாக்கில் அடிபடுகிறது. ஆனால் எந்தப் பரிதாபமும் இல்லாமல் சட்டக் கல்லூரி செல்லும் மாணவனைக் கையைப் பிடித்துக்கொண்டு காலில் ஏறி பூட்ஸ் காலால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பெரிய கொடுமை நிகழ்த்தப்படுகிறது.

இவ்வளவு செய்தும் நான் செய்யவில்லை என்று எனது மகன் உறுதியாக நின்றதில் இரவோடு இரவாக நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தினர். சிறையில் இருந்து 40 முதல் 50 நாட்கள் வெளியே வர முடியாது; எங்களை எதிர்த்தால் இப்படித்தான் பதிலடி கொடுப்போம் என்ற திமுகவின் சதியில் எனது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். எனது மகன் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அவர் உண்மையில் கஞ்சா பயன்படுத்தியுள்ளார் என்றால் நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும். நான் வரவேற்கிறேன். ஆதாரம் இருக்கும் என்றால் எனது மகன் என்றாலும் சட்டத்தின் முன் தண்டனை அனுபவிக்கட்டும். யாராக இருந்தாலும் என்ன தவறு செய்தாலும் தண்டனை பெறவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. போலீசார் நீதிமன்றம் மூலம் ஆதாரம் வைத்து இருக்கலாம். அதை விடுத்து எனது மகனை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து காலை உடைத்து இத்தனை கொடுமை செய்கிறீர்கள். பிறகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் அதனை பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்திலும் நீதிபதி பதிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us