அறிவாலய வாசலில் நாக்கை தொங்கவிட்டவாறு நிற்கின்றனர்: அமைச்சர் செழியன் பேச்சு
அறிவாலய வாசலில் நாக்கை தொங்கவிட்டவாறு நிற்கின்றனர்: அமைச்சர் செழியன் பேச்சு
அறிவாலய வாசலில் நாக்கை தொங்கவிட்டவாறு நிற்கின்றனர்: அமைச்சர் செழியன் பேச்சு
ADDED : மார் 16, 2025 01:51 AM

சென்னை: “எங்கள் எதிரிகளுக்கு கூட்டணியை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நாங்கள் விலக மாட்டோமா, பிரிய மாட்டோமா என, நாக்கை தொங்கவிட்டாவாறு பார்த்து நிற்கின்றனர்,” என, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசினார்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
தேசிய அளவில், தமிழகம் உயர் கல்வி, பள்ளிக் கல்வியில் உயர்ந்து இருக்கிறது. அதற்கு திராவிட தலைவர்கள், பொதுவுடமை தலைவர்கள் போட்ட அடித்தளம் தான் காரணம். ஆட்சி அதிகாரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., இருக்கலாம். அதற்கு தளம் அமைத்து, இதை செய்ய வேண்டும் என, சொல்வது பொதுவுடமை இயக்கம்.
எங்கள் கரம், எப்போதும் தோழமைகளின் பொதுவுடமை இயக்கங்களை சார்ந்து இருக்கும். இது, எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. விலக மாட்டோமா, பிரிய மாட்டோமா என அறிவாலய வாசலில் நின்று, நாக்கை தொங்கவிட்டவாறு காத்துள்ளனர். தோழர்களின் கரங்களை பிடித்து ஒன்றுபட்டால், இந்தியாவுக்கே வெளிச்சம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
மத்திய அரசிடம் புதிதாக அறிவாலயம் கட்ட, நாங்கள் பணம் கேட்கவில்லை. தனிப்பட்ட எனக்கு பணம் கொடுங்கள் என கேட்கவில்லை. 43 லட்சம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை தான் கேட்கிறோம். ஆனால், 'பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் கையெழுத்திடுங்கள்; 30 நிமிடத்தில் பணம் தருகிறோம்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.
தேசிய கல்விக் கொள்கையை நுட்பமாக ஆராய்ந்தால் அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமம் புரியும். ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏதாவது ஒரு வழியில் புகுத்த திட்டமிட்டே கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துவதாகச் சொல்லும் பா.ஜ., யாரும் விருப்பப்படவில்லை என்று தெரிந்ததும், அதிலும் ஒரு தந்திரத்தை மேற்கொண்டுள்ளது; பிஸ்கட் கொடுத்து ஆதரவு திரட்டுகிறது. பொய்யை அவிழ்த்து விட்டு, மனதை மயக்கி பா.ஜ.,வினர் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர்.
என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டோம்; நாங்கள் மும்மொழி கொள்கைக்கு எதிரானவர்கள் என்று சொல்லி, மாணவர்கள் உறுதியாக கையெழுத்திட மறுக்கின்றனர்.
ஆனால், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தும் அண்ணாமலை, 'நீட்' தேவையில்லை என்பதை வலியுறுத்தி, அரசு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, கையெழுத்து படிவங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்த போது, அதற்கு ஏன் மதிப்பளிக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை திணிக்கவே, பா.ஜ., இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துகிறது
கல்வித் தரத்தில் உலக நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்க ஆசைப்படும் எங்களை, பீஹார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.