உண்மைய சொன்னா ஒத்துக்கணும் போக்குவரத்து அமைச்சர் மீது தொழிற்சங்கம் சாடல்
உண்மைய சொன்னா ஒத்துக்கணும் போக்குவரத்து அமைச்சர் மீது தொழிற்சங்கம் சாடல்
உண்மைய சொன்னா ஒத்துக்கணும் போக்குவரத்து அமைச்சர் மீது தொழிற்சங்கம் சாடல்
ADDED : பிப் 02, 2024 01:19 AM

திருப்பூர்:'இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக மேடைதோறும் பேசும் அமைச்சர் உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்' என வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் சாார்பில் டிப்போக்கள் முன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக திருப்பூர் டிப்போ முன் 'தொழிலாளர் சிந்தனைக்கு' என தலைப்பிட்டு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஆத்திரம் கண்ணை மறைக்கும். இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக மேடை தோறும் பேசும் அமைச்சர் உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்.
மொத்தமுள்ள காலிப்பணியிடங்கள் 21 ஆயிரத்து 75. அரசு உத்தரவிட்டதோ எஸ்.இ.டி.சி. க்கு 800 பேர் கும்பகோணத்துக்கு 203 சேலம் கோவை மதுரை திருநெல்வேலி கழகங்களுக்கு டிரைவர் நடத்துனர் சேர்த்து 812 பேர் என அரசு அனுமதித்த இடங்கள் 1 815.
எஸ்.இ.டி.சி. அரசாணை போட்டு ஓராண்டு முடியப் போகிறது. இன்னமும் நடவடிக்கையில் தான் உள்ளது. மற்ற கழகங்கள் இன்னும் நடவடிக்கையை துவக்கவில்லை. எப்போது 21 ஆயிரத்து 75 டிரைவர் நடத்துனர்களை நியமிப்பது தொழில்நுட்பத்தில் 3000 அலுவலகத்தில் 1000 காலியிடம் நிரப்புவது வாரிசு வேலைக்கு 5 000 பேருக்கு மேல் காத்திருக்க சில நுாறு பேருக்கு வேலை வழங்கிவிட்டு எல்லாம் முடிந்தது போல் பேசுவது நியாயமா?
அ.தி.மு.க. அரசால் போடப்பட்ட எட்டு அரசாணைகளை ரத்து செய்யாமல் வாரிசு வேலை முழுமையாக எப்படி வழங்க முடியும்?
சென்ற ஆட்சியில் போட்ட அரசாணையை அப்படியே அமல்படுத்துவது தான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?
கோரிக்கை வைத்தாலும் செய்ய மறுக்கிறது அரசு. போராடினாலும் ஆத்திரம் கொள்கிறார் அமைச்சர். நெருப்பை திரை போட்டு மூட வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூறுகையில் 'போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக உண்மைக்கு முரணமாக அமைச்சர் பேசி வருவதால் பயணிகள் உட்பட அனைவரும் நிலையை அறிந்து கொள்ள அனைத்து கிளைகள் முன் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளோம்' என்றனர்.


