அன்புமணியிடம் பேசிய விஜய்: கரூர் நடைபயண தேதி மாற்றம்
அன்புமணியிடம் பேசிய விஜய்: கரூர் நடைபயண தேதி மாற்றம்
அன்புமணியிடம் பேசிய விஜய்: கரூர் நடைபயண தேதி மாற்றம்
ADDED : செப் 25, 2025 02:42 AM

சென்னை: வரும் 27ம் தேதி, கரூரில் நடைபயணம் மேற்கொள்ள இருந்த பா.ம.க., தலைவர் அன்புமணி, த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோளை ஏற்று, 28ம் தேதிக்கு மாற்றியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ம் தேதி, தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை அன்புமணி துவக்கினார். கடந்த இரு மாதங்களாக, சட்டசபை தொகுதிவாரியாக அவர் நடைபயணம் மேற்கொண்டு, பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
வரும் 27ம் தேதி சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக உழவர் சந்தை வரை அன்புமணி நடைபயணம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உழவர் சந்தை அருகே பொதுக் கூட்டம் நடத்தவும் பா.ம.க.,வினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்நிலையில், வரும் 27ம் தேதி கரூர், நாமக்கலில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கரூரில் அன்றைய தினம் அன்புமணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், விஜய்க்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இச்சூழலில் விஜய்க்கு வழி விடும் வகையில், அன்புமணி தன் நடைபயண திட்டத்தை மாற்றியுள்ளார். வரும் 27ம் தேதி திண்டுக்கல், 28ம் தேதி கரூரில் நடைபயணம் செல்ல இருப்பதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
அப்பா -- மகன் மோதலால் பா.ம.க., இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் பேசி வருவதாகவும், இதனால், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க, அன்புமணி பேச்சு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜய்க்காக தன் நடைபயண தேதியை அன்புமணி மாற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, 'தன் நடைபயண திட்டத்தை எளிதில் அன்புமணி மாற்ற கூடியவர் அல்ல.
'ஆனால், விஜய் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதால், கரூர் நடைபயணத்தை மறுநாள் மாற்றிக் கொண்டுள்ளார். விஜயுடன் இணக்கமான சூழலை அன்புமணி விரும்புகிறார்' என்றார்.