40 லட்சம் பனை விதைகள் நடப்பட்டதா? விபரம் இல்லை என அரசு கைவிரிப்பு
40 லட்சம் பனை விதைகள் நடப்பட்டதா? விபரம் இல்லை என அரசு கைவிரிப்பு
40 லட்சம் பனை விதைகள் நடப்பட்டதா? விபரம் இல்லை என அரசு கைவிரிப்பு
ADDED : மே 27, 2025 04:25 AM

சென்னை : பசுமை காடுகள் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் நடவு செய்யப்பட்ட பனை விதைகள் குறித்த விபரம் அரசிடம் இல்லாதது, பனை தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பசுமை காடுகள் திட்டத்தின் கீழ், காடுகளின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2021 முதல் ஆண்டுதோறும் 10 லட்சம் பனை விதைகளை, மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் கரையோரம், வனத்துறையுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் நடவு செய்து, பராமரித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும், இதுகுறித்த விபரங்கள் எதுவும் அரசிடம் இல்லாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, 'பனையெனும் கற்பகத் தரு' அமைப்பின் தலைவர் கவிதா காந்தி கூறியதாவது:
தமிழகத்தில் கள் ளுக்கு அரசு தடை விதித்திருப்பதால், பலரும் பனையின் பயன் கருதாது, மரங்களை ஆலைகளுக்கு வெட்டி விற்பனை செய்து விடுகின்றனர்.
இதை தவிர்க்க, அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என, கடந்த ஆண்டு எங்கள் சங்கம் சார்பில் வழக்கு பதிவு செய்தோம்.
அதற்கு அரசு தரப்பில், 'ஆண்டுதோறும், 10 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படுவதால், தனிச்சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று பதில் அளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படும் பனைகள் குறித்த விபரங்களை கேட்டால், அதிகாரிகள் தகவல் இல்லை என்கின்றனர்.
மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட பெரும்பாலான வனக்கோட்ட பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாக, பனை விதைகள் எதுவும் நடவு செய்யவில்லை என்று பதில் தந்துஉள்ளனர்.
அரசோ, 40 லட்சம் பனை விதைகளை நடவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது; அது, உண்மையா என்று தெரியவில்லை. பனை தொழிலாளர்களை ஏமாற்றாமல், நடவு செய்யப்பட்ட விதைகளின் விபரங்களை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.