எம்.ஜி.ஆர்., பங்களா யாருக்கு; திருச்சியில் தீராத தலைவலி
எம்.ஜி.ஆர்., பங்களா யாருக்கு; திருச்சியில் தீராத தலைவலி
எம்.ஜி.ஆர்., பங்களா யாருக்கு; திருச்சியில் தீராத தலைவலி
ADDED : ஜூன் 11, 2025 09:11 AM

திருச்சி: திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., பங்களாவை, அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு பட்டா மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று, ஓய்வு பெற்ற சர்வேயர் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.
உத்தரவு
திருச்சிக்கு வந்தால், தான் தங்குவதற்காக, 1984ல் உறையூர் பகுதியில் உள்ள, 80,000 சதுர அடியில் வீட்டுடன் கூடிய இடத்தை 4 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். அதன்பின் எம்.ஜி.ஆர்., இறந்து விட்டார்.
எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக, எம்.ஜி.ஆர்., அண்ணன் சக்கரபாணியின் மகள்கள், மகன்கள் என, 10 பேர் அங்கீகரிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர்., பெயரில் உள்ள திருச்சி பங்களா, அவரது வாரிசுகளின் பெயருக்கு மாற்றப்பட்டு, வாரிசுகளில் ஒருவரான சந்திரன் பெயரில் வரிகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அந்த நிலம், அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரிலும், பின் கோவிந்தசாமி என்ற தனி நபர் பெயரிலும் மாற்றப்பட்டு, 2021ல், மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் என்று பட்டா மாற்றப்பட்டது. தற்போது, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த பங்களா, அ.தி.மு.க.,வின் சொத்தாக உள்ளது.
பெயர் மாற்றம்
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., வாரிசுகள் சார்பில், ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர், அந்த பங்களாவை மீண்டும் எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கே வழங்கிட பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று, திருச்சி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், 'அது, எம்.ஜி.ஆர்., தன் பணத்தில் வாங்கியது. அது சட்டப்பூர்வமாக அவரது வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டது.
'இடையில், பங்களாவை அ.தி.மு.க., பொதுச்செயலர், பின் கோவிந்தசாமி, மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இவை, எந்த ஆவணங்கள் அடிப்படையில் செய்யப்பட்டது என தெரியவில்லை. 'எம்.ஜி.ஆர்., உயில் ஏதும் எழுதி வைக்காத நிலையில், அந்த சொத்தை கட்சிக்கோ, தனி நபருக்கோ எப்படி பட்டா போட்டு கொடுத்தனர் என்று தெரியவில்லை.
'எனவே, அரசு ஆவணங்களை சரிபார்த்து, அந்த பங்களா மற்றும் இடத்தை, எம்.ஜி. ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.