Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மீனவர்கள் கைது விவகாரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லையே ஏன்: ஐகோர்ட் கேள்வி

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லையே ஏன்: ஐகோர்ட் கேள்வி

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லையே ஏன்: ஐகோர்ட் கேள்வி

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லையே ஏன்: ஐகோர்ட் கேள்வி

ADDED : பிப் 06, 2024 02:57 AM


Google News
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த, மீனவர் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் என்பவர் தாக்கல் செய்த மனு:

கடந்த 1983 முதல் 2013 நவம்பர் வரை, தமிழக மீனவர்கள் 111 பேர், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்; 16 பேர் மாயமாகி உள்ளனர்; 439 பேர் காயமடைந்து உள்ளனர். இந்திய மீனவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில், இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.

கடந்த டிசம்பர் 9ல், இலங்கை கடற்படையினரால், 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின், 13ல் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். கடந்த மாதம் 22ம் தேதி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இத்தகைய சட்டவிரோத கைது நடவடிக்கையால், தமிழக மீனவர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மவுரியா, ''கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க, துாதரக அளவில் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு, தினசரி 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது,'' என்றார்.

மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ''துாதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, 'மீனவர்கள் கைது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதால், இதை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?' என, கேள்வி எழுப்பிய முதல் பெஞ்ச், மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us