Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

UPDATED : செப் 03, 2025 03:48 AMADDED : செப் 03, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகம் வரும் போது, பிசினஸ்க்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள்; உங்களுடன் இருந்து உங்களுடைய வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னர்களை பார்ப்பீர்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். ஜெர்மனியில் தமிழக தொழில் துறை ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெர்மனி போலவே தமிழகத்திற்கு பெரிய வரலாறும், பாரம்பரியமும் உள்ளது. தமிழும், ஜெர்மனியும் உலகின் பழமையான மொழிகளில் முக்கியமானவை. ஜெர்மனியின் பண்பாடு, தொழில் நுணுக்கம், புத்தாக்க வலிமை போன்றவை வியப்பை ஏற்படுத்துகின்றன. ஜெர்மனியின் கலை உணர்வை ஒவ்வொரு கட்டடத்திலும், தெருக்களிலும் பார்த்து நான் ரசிக்கிறேன்.

தமிழகத்திலும், பல ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றன. இந்தியாவிடம் வணிக உறவு கொள்ளும் முதன்மையான நாடு ஜெர்மனி. எப்படி, 'மேட் இன் ஜெர்மனி' என, தரத்தின் அடையாளமாக உலகம் முழுதும் பார்க்கிறார்களோ, அப்படியே, 'மேட் இன் தமிழ்நாடு' என்பதும் தரமும், திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தொழில் துறையின் இதய துடிப்பாக தமிழகம் விளங்குகிறது. இன்னும் சொன்னால், தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி. முன்னணி உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமின்றி, 54 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.

திறன் மேம்பாட்டிலும், நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். உலக தரச்சான்று பெற்ற திறன் மேம்பாட்டு மையங்களை தொழிலகங்களுடன் இணைத்து, இளைஞர்களை உலக அளவுக்கு தகுதியானவர்களாக உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

ஜெர்மனியின் பயிற்சி நுணுக்கங்களும், நுட்பங்களும் எங்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன. நான் இங்கே வெறும் முதலீட்டுக்காக மட்டும் வரவில்லை. ஜெர்மனி - தமிழகம் ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே, ஒரு பாலம் அமைக்க வந்திருக்கிறேன்.

தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழகத்தின் ஆற்றலையும் இணைத்தால், உலகளவில் ஒரு புதிய வளர்ச்சி பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே ஒரு வலுவான வர்த்தக பாலத்தையும் உருவாக்க முடியும்.

வணிகம் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில், இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அனைத்து வசதிகளையும், தி.மு.க., அரசு வழங்கி கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தொழில்களை துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு, தமிழக அரசு காத்திருக்கிறது.

ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரும் போது, தமிழகத்தை உங்கள் பிசினஸ்க்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள். உங்களுடன் இருந்து உங்களுடைய வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னர்களை பார்ப்பீர்கள்.

பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம். எனவே, ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us