ஜனாதிபதி முர்முவுக்கு பிஜியின் உயரிய விருது
ஜனாதிபதி முர்முவுக்கு பிஜியின் உயரிய விருது
ஜனாதிபதி முர்முவுக்கு பிஜியின் உயரிய விருது
ADDED : ஆக 07, 2024 04:20 AM

சுவா : நம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பிஜி நாட்டின் 'கம்பானியன் ஆப் தி ஆர்டர்' என்ற உயரிய விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பசிபிக் தீவு நாடுகளான பிஜி, நியூசிலாந்து, திமோர் - லெஸ்டே ஆகியவற்றுக்கு ஆறு நாள் பயணமாக டில்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டார். முதல் நாடாக பிஜிக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று பிஜி அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் ரபுகா ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அப்போது காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிஜி தலைநகர் சுவாவில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை வளாகம், நம் நாட்டின் துாதரகம் மற்றும் கலாசார மையம் உள்ளிட்டவை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், அந்நாட்டு பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை அங்கீகரிக்கும் வகையில், பிஜியில் வழங்கப்படும் உயரிய விருதான, 'கம்பானியன் ஆப் தி ஆர்டர்' என்ற விருதை, நம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.