Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்'; பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்'; பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்'; பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 'பாம் சைக்ளோன்'; பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு

ADDED : டிச 03, 2025 11:00 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்: அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் துவங்கி மார்ச் வரை குளிர்காலம் நீடிக்கும். இந்த சமயத்தில் அமெரிக்காவை கடும் பனிப்புயல்கள் தாக்கும். வெப்பநிலை மைனஸ் 10 முதல் மைனஸ் 25 டிகிரி செல்ஷியஸ் வரை சரியும். நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற வட கிழக்கு மாகாணங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு பனிப்புயல்கள் அமெரிக்காவை தாக்கி உள்ளன. 33 சதவீத பரப்பை பனி மூடியுள்ளது. கடந்த 2019ல் இதே காலக்கட்டத்தில் 41 சதவீத அமெரிக்க நிலப்பரப்பு பனியால் மூடியிருந்தது. தற்போது வீசும் பனிப்புயலால், கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது. செயின்ட் லுாயிஸ் நகரில் பனி படர்ந்ததன் காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பல விபத்துகள் நேற்று ஏற்பட்டன. மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பனிப்புயல் ஒன்று நேற்று அதி தீவிர பனிப்புயலாக உருவாகியுள்ளது. காற்றின் அழுத்தம் மில்லிபார் என்ற அளவீட்டின்படி கணக்கிடப்படுகிறது. 24 மணிநேரத்தில் 24 மில்லிபார் அளவுக்கு காற்றழுத்தம் குறைந்தால் அது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர புயலாக கருதப்படும். அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா துவங்கி கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

பயணங்களை தவிர்க்கவும், உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை சேமிப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us