புகாரில் சிக்கிய சீன ராணுவ உயரதிகாரிகள் பதவி பறிப்பு
புகாரில் சிக்கிய சீன ராணுவ உயரதிகாரிகள் பதவி பறிப்பு
புகாரில் சிக்கிய சீன ராணுவ உயரதிகாரிகள் பதவி பறிப்பு
ADDED : ஜூன் 28, 2025 01:51 AM

பீஜிங்: சீனாவில் எம்.பி.,க்களாக இருந்த கடற்படை தலைமை தளபதி, தேசிய அணுசக்தி கழகத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் மத்திய ராணுவ கமிஷனின் உறுப்பினர் ஆகிய மூன்று பேரின் பதவிகள் சமீபத்தில் பறிக்கப்பட்டன.
நம் அண்டை நாடான சீனாவில் அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் பார்லிமென்ட், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
இங்கு எம்.பி.,க்களாக 2,977 பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் மாகாணங்கள், பிராந்தியங்கள், மக்கள் குழுக்கள் மற்றும் சீன ராணுவமான மக்கள் விடுதலைப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து ஐந்து ஆண்டு பதவிக்காலத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு உறுப்பினராக இருந்த கடற்படை தலைமை தளபதி லி ஹன்ஜுன் மற்றும் தேசிய அணுசக்தி நிலையத்தின் மூத்த விஞ்ஞாணி லியு ஷிபெங் ஆகியோர் அப்பதவிகளில் இருந்து சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதற்கிடையே சீன பார்லிமென்ட்டின் நிலைக்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அதில், மத்திய ராணுவ கமிஷனின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜெனரல் மியாவோ ஹுவாவை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
சீனாவின் மத்திய ராணுவ கமிஷனே அனைத்து ராணுவ பிரிவுகளையும் கட்டுப்படுத்தும் உயர்ந்த அமைப்பாக உள்ளது. இதன் தலைவராக சீன அதிபர் ஷீ ஜின்பிங் உள்ளார். பதவி நீக்கப்பட்ட அனைவரும் ஊழல், ஒழுக்கமின்மை ஆகிய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த களையெடுப்பு பணி தொடரும் என கூறப்படுகிறது.