நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பு; 61 ஆண்டுக்குப் பிறகு போராடி ரத்து செய்த கொரியப் பெண்
நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பு; 61 ஆண்டுக்குப் பிறகு போராடி ரத்து செய்த கொரியப் பெண்
நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பு; 61 ஆண்டுக்குப் பிறகு போராடி ரத்து செய்த கொரியப் பெண்

சியோல்: தென்கொரியாவில் 61 ஆண்டுகளுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றத்தில் போராடி ரத்து செய்ய வைத்துள்ளார் மூதாட்டி ஒருவர்.
தென்கொரியாவை சேர்ந்தவர் சோய் மால் ஜா, 79. இவர், 61 ஆண்டுகளுக்கு முன்னதாக, வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது சோய்க்கு வயது 18. அவரை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வயது 21. பாலியல் தாக்குதலின் போது, கடுமையாக போராடிய சோய், அந்த வாலிபரின் நாக்கை கடித்து துப்பிவிட்டார்.பாலியல் பலாத்காரம் மற்றும் நாக்கை கடித்துத் துப்பியது ஆகிய இரு வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பலாத்காரம் செய்த வாலிபருக்கு 6 மாத சிறை தண்டனையும், எதிர்த்துப் போராடிய போது நாக்கை கடித்து துப்பிய பெண்ணுக்கு 10 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை, மனதளவில் சோய் ஏற்க வில்லை. தன் மீதான வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று 2018ல் இருந்து அவர் வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாக, சம்பவம் நடந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவின் புஸான் நகரில் வழக்கு மறு விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கிய உடனேயே, அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நடந்த தவறுக்காக சோய் இடம் மன்னிப்பு கேட்டனர். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் வலியுறுத்தினர். இதையடுத்து நீதிமன்றம், வருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்தது.
இது குறித்து சோய் கூறியதாவது: எனக்கு அநியாயமாக விதிக்கப்பட்ட தண்டனையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க விரும்பினேன். சம்பவம் நடந்தபோது என்னை சுற்றி இருந்த பலரும், இதைப் பற்றி பேச வேண்டாம் என்றும், அமைதியாக இருந்து விடும்படியும் கூறினர். பாறையின் மீது முட்டையை வீசினால் முட்டை தான் உடையும் என்றும் கூறினர். ஆனால் என்னால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது தண்டனையை ரத்து செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவரது இந்த வழக்கு, தென்கொரியாவில் சட்டப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.பாலியல் சித்ரவதைக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையை நீதிமன்றம் புரிந்து கொள்ள தவறியதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் என்று சட்டப் புத்தகத்தில் இந்த வழக்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 61 ஆண்டுக்கு முன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சோய் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு உலகம் முழுவதும் meToo என்ற பெயரில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் குரல் எழுப்ப தொடங்கினர். அப்போதுதான், தானும் இதே போல் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி பொதுவெளியில் சோய் குரல் எழுப்பத் தொடங்கினார். அதன் பயனாக, 61 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.