Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!

UPDATED : ஜூன் 23, 2025 08:58 AMADDED : ஜூன் 23, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் இந்த முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்பதே இந்தியர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறியதாவது: ஹோர்முஸ் நீரிணையானது, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது. கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.

உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா 3வது நாடாக திகழ்கிறது. தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. தற்போது, இந்தியா 500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால், முன்னெச்சரிக்கையாகவே, இந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் செய்யப்படும் ஒட்டுமொத்த இறக்குமதியை விட ரஷ்யாவிலிருந்து அதிகமான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அதாவது, ரஷ்யாவிடம் இருந்து தினமும் 20 லட்சம் பீப்பாய்கள் முதல் 22 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 35 சதவீதமாகும். ரஷ்யாவில் இருந்து மே மாதத்தில் 19 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள், சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்காவை சுற்றிவரும் கடல் வழி அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக வரும். இல்லையெனில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கொண்டு வரப்படலாம். இதற்கு செலவுகள் அதிகமானாலும், இந்தியாவின் நம்பிக்கையான வழித்தடங்களாகும்.

அதேபோல, அமெரிக்காவிடம் இருந்து மே மாதத்தில் நாளொன்றுக்கு 2.80 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 4.39 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் இந்தியா குறைத்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டே இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்த நிலையிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us