Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை: இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு: மோடி - ஜின்பிங் வலியுறுத்தல்

UPDATED : செப் 01, 2025 10:53 PMADDED : செப் 01, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
தியான்ஜின்: இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் நேற்று சந்தித்து பேசினர்.

வரவேற்பு சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது.

இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பிரதமர் மோடி கடைசியாக 2018ல் சீனாவின் வூஹானுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அதன்பின் கொரோனா தொற்று, லடாக்கின் கல்வான் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் பிரதமர் சீனாவுக்கு செல்வதை தவிர்த்தார். அதன் பின் இரு நாடுகளும் எல்லை பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண முன் வந்தன.கடந்த 2022ல் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில் ஜி - 20 உச்சி மாநாடு நடந்தது.

எல்லை பிரச்னைக்கு பின் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இதில் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர். இது இரு தரப்பு உறவை சீரமைத்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தார். சீனாவுக்கு பொருளாதார பற்றாக்குறையை காரணம் காட்டி, இதே அளவு வரி விதித்தார்.

செய்தி 'இந்த வரி விதிப்பு இந்தியா - சீனாவை நெருக்கமாக்கும், அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மிகப்பெரிய வீழ்ச்சி இது' என, அந்நாட்டின் அரசியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களாக கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் கணிப்பின்படியே சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தற்போது பங்கேற்று உள்ளார். அவரை அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த விரிவான பேச்சில் இருதரப்பு உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து இரு தலைவர்களும் வெளிப்படையாக பேசினர். இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட செய்தியாக பார்க்கப்படுகிறது. ''பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை குறித்து விவாதிக் கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவு தெரிவித்தது,'' என நம் வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

'280 கோடி மக்களின் நலன்; நம் இரு தரப்பு உறவில் உள்ளது

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: நம் இரு நாடுகளின் ஒத்துழைப்பு 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைந்தவை. நம் உறவு சிறப்பாக இருந்தால், அது முழு மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை அடிப்படையில் உறவை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கடந்த ஆண்டு ரஷ்யாவின் கஜானில் நாம் மிகவும் பயனுள்ள விவாதங்களை நடத்தினோம்.
அது நம் உறவுகளுக்கு நேர்மறையான திசையை காட்டியது. எல்லையில் படைகள் பின்வாங்கிய பின், தற்போது அமைதி நிலவுகிறது. இது நம் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவைகளும் மீண்டும் துவங்கப்பட உள்ளன. இந்தியாவும் சீனாவும் தங்கள் உறவுகளை மூன்றாம் நாட்டின் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இரு நாடுகளும் உறவு குறித்து தனித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தைப் பின்பற்ற வேண்டும். பயங்கரவாதம், நியாயமான வர்த்தகம் போன்ற பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் சவால்களில் இரு நாடுகளும் பொதுவான ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



இந்தியா வர சீன அதிபருக்கு அழைப்பு

' பிரிக்ஸ்' எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பின் 2026 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருமாறு, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.



'இந்தியாவும் சீனாவும் நண்பர்கள்; பகைவர்கள் இல்ல

சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியதாவது: நம் இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது தான் சரி யான தேர்வு. எல்லைப் பிரச்னை நம் உறவுகளை முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. இந்தியாவும் சீனாவும் நண்பர்கள். பகைவர்கள் இல்லை . நாம் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தல் இல்லை. மாறாக வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புகளை வழங்கும் நாடுகள். இந்த வழியை நாம் பின்பற்றினால், சீனா- -இந்திய உறவுகள் நிலையானதாகவும், நீண்ட காலமும் வளரும். சீனா டிராகன் என்றால், இந்தியா யானை.
இரண்டும் ஒன்றாக வலம் வருவது தான் சரியான தேர்வு. இதுவே தற்போது உலகின் தேவையு ம் கூட. உலகம் தற்போது நுாற்றாண்டில் ஒருமுறை நிகழும் மாற்றங்களை எதிர்கொள்கிறது. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் குழப்பமாகவும் உள்ளது. சீனாவும் இந்தியாவும் கிழக்கின் பண்டைய நாகரிகங்கள். உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகள், மற்றும் உலகளாவிய தெற்கின் மிகப் பழமையான நாடுகள். உலகின் அமைதி மற்றும் வளத்திற்கு நம் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us