ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ADDED : மே 29, 2025 05:12 AM

டெல் அவிவ்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் காசா தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா அடங்கிய பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அதன் ராணுவப் பிரிவு தலைவர் முகமது டெய்ப் ஆகியோர், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
கடந்தாண்டு அக்டோபரில், ஹமாஸ் பிரிவின் காசா தலைவரான யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருடைய இளைய சகோதரரான முகமது சின்வார், ஹமாஸ் பிரிவின் தலைமையை ஏற்றார்.
கடந்த, 14ம் தேதி, காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள யூரோப்பியன் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் படைகள் துல்லிய தாக்குதல்கள் நடத்தின.
இந்த வளாகத்தில் சுரங்க அறையில், பதுங்கு குழிகள் அமைத்து, முகமது சின்வார் தங்கிஇருந்தார்.
அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில், முகமது சின்வார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பார்லிமென்டில் நேற்று அறிவித்தார்.