ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
ADDED : மே 20, 2025 09:53 AM

ஜெருசலம்: ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை, இந்தியாவிடம் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் ஒப்படைத்தால் மட்டுமே அனைத்தும் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜெ.பி. சிங் கூறி உள்ளார்.
பஹல்காம் தாக்குதல், அதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி, பயங்கரவாத முகாம்கள் அழிப்பு என இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆபரேஷன் சிந்தூர் என்பதே இடைநிறுத்தமே, இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கான இந்திய தூதர், பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறி உள்ளார். இஸ்ரேலில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது; மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களை கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன்பு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டுள்ளனர். அதன் பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்காக போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம்.
நாங்கள் சிந்துநதி நீர் மூலம் தண்ணீரை பாய அனுமதித்தாலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் பாய அனுமதிக்கிறது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது என்று இதைத்தான் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி உள்ளார்.
பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர்.
ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும் போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.