ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவக்கம்; பதற்றம் அதிகரிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவக்கம்; பதற்றம் அதிகரிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவக்கம்; பதற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது.
இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் ஆதரவு தெரிவித்தது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தின. ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி தொடர்பான ரகசியங்களை திருடியுள்ளதாக ஈரான் சமீபத்தில் கூறியது. அணுசக்தி ஒப்பந்தத்தில் நல்ல முடிவு ஏற்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரானில் அணுநிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படை தலைவரான ஜெனரல் முகமது பகேரி, ஏவுகணை திட்ட தலைவராக செயல்பட்ட அலி ஹஜிஜதேஹா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து இஸ்ரேல் அவசரநிலையை அறிவித்தது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் அவர்கள் அமெரிக்காவின் ஈடுபாடு மற்றும் உதவி எதுவும் இல்லை என்றனர்.
ஈரான் எந்த நேரத்திலும் அணு ஆயுதத்தை உருவாக்கி விடும் நிலையில் உள்ளது. தன் கூட்டாளி நாடுகளுக்கும் அணு ஆயுதத்தை பரப்பிவிடும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான சலாமி என்பவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் பதில் தாக்குதல்
விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எதிராக, ட்ரோன்களை பயன்படுத்தி ஈரான் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுவரை 100 ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர் வெடித்துள்ள நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை மூடுவதாக அண்டை நாடான ஜோர்டான் அறிவித்துள்ளது.