Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 'ஹமாசை ஒழித்து போரை முடிப்போம்' ஐ.நா.,வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

'ஹமாசை ஒழித்து போரை முடிப்போம்' ஐ.நா.,வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

'ஹமாசை ஒழித்து போரை முடிப்போம்' ஐ.நா.,வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

'ஹமாசை ஒழித்து போரை முடிப்போம்' ஐ.நா.,வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

ADDED : செப் 26, 2025 11:03 PM


Google News
நியூயார்க்:'ஹமாஸ் அமைப்பை ஒழித்து, காசாவில் நடக்கும் போரை முடித்து வைப்போம்' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.

இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதைத் தவிர, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. இதிலும் இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்தக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று பேசியதாவது:

காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

அந்த நாடுகளின் தலைவர்கள், சில அழுத்தத்தினால் வளைந்து கொடுத்திருக்கலாம். ஆனால் இஸ்ரேல் ஒருபோதும் வளைந்து கொடுக்காது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருக்கும் உங்கள் முடிவு யூதர்களுக்கு எதிராகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் செயல்படும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்.

கொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் குழந்தைகளை எரிப்பவர்களை கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஒரு அரசை கொடுக்க நினைப்பவர்களை நான் கண்டிக்கிறேன். தனி நாடு அங்கீகாரம் என்பது பயங்கரவாதத்துக்கு வெகுமதி அளிப்பதாக உள்ளது; இது நடக்காது.

காசாவில் நடக்கும் போர் முடிவுக்கு வரும். ஹமாஸ் அமைப்பை ஒழித்து, இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நெதன்யாகு பேசத் துவங்கியதும் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெருமளவில் வெளிநடப்பு செய்தனர். பலத்த எதிர்ப்புக்கு இடையே தன் உரையை அவர் நிகழ்த்தினார்.

மேலும், அவர் தன் உரையை, ஒலிபெருக்கியின் வாயிலாக காசா பகுதி மக்களுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us