250வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் அணிவகுத்த ராணுவம்
250வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் அணிவகுத்த ராணுவம்
250வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் அணிவகுத்த ராணுவம்
ADDED : ஜூன் 16, 2025 12:59 AM

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அதிபர் டிரம்ப் தலைமையில் வாஷிங்டன் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது.
அமெரிக்காவில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புகள் அரிதாகவே நடக்கின்றன. பொதுவாக முக்கியமான போர் வெற்றிகள், தேசிய நிகழ்வுகள் அல்லது பதவியேற்பு விழாக்களின் போது, இத்தகைய ராணுவ அணிவகுப்புகள் நடந்துள்ளன.
கடைசியாக 1991ல் ஜூன் 8ல், வளைகுடா போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், தலைநகர் வாஷிங்டனில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் செலவு மிக்கது என்பதால், இதை நடத்தி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என, பல அதிபர்கள் தவிர்த்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 2017ல் பிரான்சின் தேசிய தின ராணுவ அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் ஈர்க்கப்பட்ட அவர், அதே போன்ற அணிவகுப்பை அமெரிக்காவில் நடத்த விரும்பினார்.
6,600 வீரர்கள்
இந்நிலையில், அமெரிக்க ராணுவம் துவங்கப்பட்டதன் 250வது ஆண்டு விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக தலைநகர் வாஷிங்டனில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த டிரம்ப் உத்தரவிட்டார்.
அதன்படி 6,600 வீரர்கள், 128 அதிநவீன டாங்கிகள், 50 ஹெலிகாப்டர்கள் மற்றும் பல ராணுவ வாகனங்கள், இந்த அணிவகுப்பில் பங்கேற்றன. இந்த அணிவகுப்பை அதிபர் டிரம்ப், தன் மனைவி மெலானியாவுடன் பார்வையிட்டார்.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு 200 முதல் 370 கோடி ரூபாய் வரை செலவாகியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், ''நம் ராணுவம் அமெரிக்க வரலாற்றை மட்டுமல்ல; உலகின் வரலாற்றையும் மாற்றிய பெருமை உடையது. எங்கள் வீரர்கள் ஒரு போதும் விட்டுத் தருவதில்லை; சரணடைவதில்லை; பின்வாங்குவதில்லை. அவர்கள் போராடி வெல்கின்றனர்,'' என்றார்.
அமெரிக்காவில் ராணுவ அணிவகுப்பு நடந்த அதே நாளில், நாடு முழுதும் 'நோ கிங்' என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் பொது இடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'நோ கிங்' போராட்டம்
இந்த போராட்டத்தை '50501' என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. நாட்டின் 50 மாகாணங்களில் 50 போராட்டங்கள் ஒற்றை இயக்கம் என்பதை இந்த எண் குறிக்கிறது.
இந்த அமைப்பினர் கூறுகையில், 'டிரம்பின் நடவடிக்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை போல் இல்லாமல், மன்னரின் நடவடிக்கைகள் போன்று உள்ளன. மக்களின் உரிமைகள், வேலைவாய்ப்புகளை அவர் பறித்துள்ளார். அதைக் கண்டித்து 'நோ கிங்' போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்றனர்.