Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த பாக்., பிரதமர்

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த பாக்., பிரதமர்

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த பாக்., பிரதமர்

துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்த பாக்., பிரதமர்

ADDED : மே 27, 2025 07:30 AM


Google News
இஸ்தான்புல்: துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானது. மத்திய அரசின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, நம் எல்லை மாநிலங்களில் பாகிஸ்தான் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில், மேற்காசிய நாடான துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கிய துருக்கி, அதை செயல்படுத்துவதற்கான வீரர்களையும் அனுப்பி வைத்தது.

இந்த சூழலில், அரசு முறை பயணமாக துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் சென்றார். இந்த பயணத்தின் போது, இஸ்தான்புல்லில் அதிபர் தையிப் எர்டோகனை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயம் ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலின் போது உதவியதற்காக துருக்கி அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். இதை தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

அதில், 'இஸ்தான்புல்லில் சகோதரர் அதிபர் எர்டோகனை சந்தித்தேன். சமீபத்திய பாகிஸ்தான், இந்தியா மோதலில் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். அசைக்க முடியாத சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்னும் நெருக்கமாக செயல்படுவதற்கான உறுதியை நாங்கள் எடுத்தோம்' என, தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us