பாராசிட்டமால் சாப்பிட்டால் ஆட்டிசம் பாதிப்பா: டிரம்ப் கூற்றை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம்
பாராசிட்டமால் சாப்பிட்டால் ஆட்டிசம் பாதிப்பா: டிரம்ப் கூற்றை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம்
பாராசிட்டமால் சாப்பிட்டால் ஆட்டிசம் பாதிப்பா: டிரம்ப் கூற்றை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம்
ADDED : செப் 24, 2025 08:08 AM

ஜெனீவா; பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் கூற்றை, உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.
பாராசிட்டமால் அல்லது அசிட்டாமினோபென் என்று அழைக்கப்படும் மாத்திரையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு வலி நிவாரணி மற்றும் காய்ச்சலை குறைக்கும் மாத்திரை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டைலெனால் என்ற மாத்திரையை ( இந்த மாத்திரை அமெரிக்காவில் பாராசிட்டமாலுக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயராகும்) கர்ப்பிணிகள் பயன்படுத்த வேண்டாம். இதை பயன்படுத்தினால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என்று ஒரு கூற்றை அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருந்தார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். பாராசிட்டமாலுக்கும், ஆட்டிசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, பொறுப்பற்ற முறையில் அவர் பேசுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.
இந் நிலையில், உலக சுகாதார நிறுவனம், டிரம்பின் கூற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது. இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் கூறியிருப்பதாவது;கர்ப்ப காலத்தில் தேவைப்பட்டால் பெண்கள் வலி அல்லது காய்ச்சலை குறைக்க பாராசிட்டமாலை (அசிட்டாமினோபென்) பயன்படுத்தலாம். இது மருத்துவ ரீதியாக கையாளப்படும் ஒன்று.
ஐரோப்பிய ஒன்றியங்களில் இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லை. ஆட்டிசத்துக்கும், இதற்கும் தொடர்பு என்று கூறுவது பொருத்தமில்லாதது.இவ்வாறு செய்தி தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் கூறி உள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. டிரம்பின் கூற்றுக்கு மருத்துவ ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளது.