Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்

கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்

கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்

கச்சத்தீவுக்கு இலங்கை அதிபர் 'திடீர்' பயணம்

UPDATED : செப் 01, 2025 10:38 PMADDED : செப் 01, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
யாழ்ப்பாணம் : இலங்கை அதிபர் அனுர குமார, இன்று( செப்.,01) மாலை திடீரென கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மீனவர்களிடம் பேசிய அவர், 'கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை' என தெரிவித்தார்.

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதால், மீனவர்களை பாதுகாப்பதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு, கச்சத்தீவை மீட்பதே, நிரந்தரத் தீர்வு,' என கூறினார்.

மேலும், 'கச்சத் தீவை, இந்தியா திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கான, நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து, விஜய் பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், கண்டனம் தெரிவித்தார். மேலும், அவர், 'தமிழகத்தில் தேர்தல் காலங்களில், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவது, தமிழக அரசியல்வாதிகளின் வழக்கம்' எனவும் விமர்சித்தார்.

Image 1463605இலங்கை அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார, காலை, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில், வளர்ச்சி பணிகளை துவங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

Image 1463606பின்னர், திடீரென மாலை 5:00 மணிக்கு யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து, நான்கு ரோந்து படகுகளுடன், கச்சத்தீவுக்கு சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார். அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடிய அனுர குமார, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

Image 1463607மேலும், அவர்களிடம், 'நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்,' என உறுதிபட தெரிவித்தார். பின்னர், கச்சத்தீவின் இயற்கை அழகை ரசித்த அவர், கச்சத்தீவின், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.

Image 1463608அதிபர் அனுரா குமார கச்சத்தீவு மீனவர்களுடன் பேசும்போது, 'இந்திய மீனவர்கள் விஷயத்தில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கப் போகிறேன். இனி, இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, மீன் பிடித்து இலங்கை கடல்படையிடம் சிக்கினால், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை அவ்வளவு எளிதாக விட மாட்டோம். அவர்களிடம் இருந்து பிடிபடும் படகுகளை, தற்போது வரை மனிதாபிமான அடிப்படையில் திரும்ப ஒப்படைத்து வருகிறோம். இனி அதுபோல் நடக்காது. படகு பிடிபட்டால், அது இலங்கைக்கே சொந்தமாகும்' என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us