ரஷ்யா ஒரு காகிதப்புலி: சொல்கிறார் டிரம்ப்
ரஷ்யா ஒரு காகிதப்புலி: சொல்கிறார் டிரம்ப்
ரஷ்யா ஒரு காகிதப்புலி: சொல்கிறார் டிரம்ப்
ADDED : செப் 24, 2025 09:52 AM

நியுயார்க்: புடினும், ரஷ்யாவும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ரஷ்யா ஒரு காகிதப்புலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. போரை கைவிடும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருவதோடு, உக்ரைனை ஆதரித்தும், ரஷ்யாவுக்கு ஆதரவான நாடுகளை விமர்சித்தும் வருகிறார்.
ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளை அதில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தும் வருகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடர, இந்தியாவும், சீனாவுமே காரணம் என்றும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இந் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகள் ஆதரவுடன் இழந்த தமது நாட்டின் பகுதியை உக்ரைன் மீட்கும் என்று டிரம்ப் கூறி உள்ளார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது;
உண்மையான ராணுவ சக்திக்கு ஒரு வாரத்திற்குள் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு போரில், ரஷ்யா மூன்றரை ஆண்டுகளாக குறிக்கோள் இல்லாமல் சண்டையிட்டு வருகிறது. உண்மையில் ரஷ்யா ஒரு காகிதப்புலி என்பதையே இது காட்டுகிறது.
போரில் உண்மையாக என்ன நடக்கிறது என்பதை ரஷ்யா முழுவதும் உள்ள மக்கள் மற்றும் மாஸ்கோவில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ளும் தருணத்தில் உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்டெடுக்கக்கூடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் உக்ரைன் போராடி முழு உக்ரைனையும் திரும்ப வெல்லும் நிலையில் உள்ளது. எப்படி இருந்தாலும், இருநாடுகளுக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.