Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்

துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்

துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்

துவங்கியது ஐ.நா., பொதுச்சபை கூட்டம்: 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தம்பட்டம்

UPDATED : செப் 24, 2025 06:36 AMADDED : செப் 23, 2025 08:51 PM


Google News
Latest Tamil News
நியூயார்க்: ' 'கடந்த ஏழு மாதங்களில் மட்டும், இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை நான் நிறுத்தியுள்ளேன். ஆனால், ஐ.நா., மற்றும் உலக நாடுகளுக்கு போர்களை நிறுத்துவதில் எந்த அக்கறையும் இல்லை,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.

ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இதில் நேற்று பேசியதாவது: கடந்த, ஏழு மாதங்களில், இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இதில் சில போர்கள் நீண்ட காலம் நடந்து வந்தன. மேலும், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயமும் இருந்தது.

என்னுடைய தலையீட்டால், இந்த போர்கள் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளன. ஐ.நா., செய்ய வேண்டியதை நான் செய்துள்ளேன். ஆனால், அதற்கான பாராட்டுகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன். இந்த போர்களை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்காத ஐ.நா., எனக்கு எந்த உதவியும் செய்யவும் முன்வரவில்லை.



சீனா மீது குற்றச்சாட்டு

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுபோலவே, ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றன. இதனால், இந்தப் போரை நிறுத்த முடியவில்லை. இதனால், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன்.

ஆக்கமும், ஊக்கமும்

இதுபோலவே, மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரும் முடிவுக்கு வரவில்லை. பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் வாயிலாக, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, உலக நாடுகள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகின்றன. ஒரு பயங்கரவாத செயலை, இந்த நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கின்றன. அமெரிக்காவுக்கு தற்போது பொன்னான காலம் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய தடையாக இருந்தது, சட்டவிரோதமாக புலம் பெயர்ந்துள்ளோரே.

இறக்குமதி வரி

அதனால்தான், இந்த விஷயத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். அதற்காகவே, விசா கட்டு ப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த விஷயத்தில் எச்சரிக்கை விடுக்கிறேன். புலம் பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தாவிட்டால், மிகப் பெரிய பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வர்த்தகம் என்பது இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் இருக்க வேண்டும். இதில் ஒருதலைபட்சமாக இருப்பதை ஏற்க முடியாது. இதற்காகவே, பல நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உலக நாடுகளுக்கு அழைப்பு பொது சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேலும் பேசியதாவது: கடந்த, 1776 ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. இதன், 250வது ஆண்டு விழாவை, 2026ல் கொண்டாட உள்ளோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்படி உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



ஏற்கனவே தனக்கு நோபல் பரிசு தரவேண்டும்என வலியுறுத்தி வரும் டிரம்ப் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்திலும் ஏழு போர்களை நிறுத்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் வகையில் பேசியது, கூட்டத்தில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us