இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது: டிரம்புக்கு அமெரிக்க எம்பி சுளீர்
இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது: டிரம்புக்கு அமெரிக்க எம்பி சுளீர்
இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது: டிரம்புக்கு அமெரிக்க எம்பி சுளீர்
ADDED : செப் 03, 2025 08:10 PM

வாஷிங்டன்: 'டிரம்பின் ஈகோ காரணமாக இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது' என அமெரிக்க எம்பி ரோ கன்னா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க எம்பியும், இந்தியா-அமெரிக்க கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா கூறியதாவது: அமெரிக்கா - இந்தியா உறவை அழிக்கும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் ஈடுபடுகிறார். அமெரிக்க- இந்தியா உறவை வலுப்படுத்த 30 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் பாதிப்புக்கு உட்படுத்துகிறார்.
ஏற்றுமதி
இந்தியா மீது அவர் 50 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இது, பிரேசிலை தவிர வேறு எந்த நாடு மீது விதிக்கப்படாத உயர்ந்த வரி விகிதம். சீனா மீது விதிக்கப்பட்ட வரியை விடவும் அதிகமானது. இது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல், ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கிறது.
அமெரிக்க உற்பத்தியாளர்களையும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கிறது. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கியும் தள்ளுகிறது. இதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை.
டிரம்பின் ஈகோ
அதிபர் டிரம்பின் ஈகோ, இந்தியா- அமெரிக்கா உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது. உலகை அமெரிக்காதான் வழிநடத்துகிறது. சீனா அல்ல என்பதை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம். இந்தியா உடனான உறவு அழிக்கப்படுகிறபோது, அதிபர் டிரம்புக்கு ஓட்டு போட்ட இந்திய அமெரிக்கர்களே எங்கே இருக்கிறீர்கள்? இவ்வாறு ரோ கன்னா தெரிவித்துள்ளார்.