/உள்ளூர் செய்திகள்/சென்னை/முதல் பட்டதாரிகளுக்கு ரூ.2,000 முதல் 1.30 லட்சம் கட்டண சலுகைமுதல் பட்டதாரிகளுக்கு ரூ.2,000 முதல் 1.30 லட்சம் கட்டண சலுகை
முதல் பட்டதாரிகளுக்கு ரூ.2,000 முதல் 1.30 லட்சம் கட்டண சலுகை
முதல் பட்டதாரிகளுக்கு ரூ.2,000 முதல் 1.30 லட்சம் கட்டண சலுகை
முதல் பட்டதாரிகளுக்கு ரூ.2,000 முதல் 1.30 லட்சம் கட்டண சலுகை
ADDED : மே 18, 2010 02:38 AM
சென்னை : அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்கள், 2,000 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணச் சலுகை பெறலாம்.
இந்த ஆண்டு முதல் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மருத்துவ விண்ணப்பத்துடன், முதல் பட்டதாரி மாணவர்கள் கல்விக் கட்டணச் சலுகையை பெறுவதற்கான படிவமும் வழங்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்கள், குறிப்பிட்ட படிவத்தில் உரிய அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கல்விக் கட்டணச் சலுகை கோரும் மாணவர், குடும்பத்தில் முதலாவது பட்டதாரி என மாணவரும், பெற்றோரும் சான்றொப்பம் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் மாணவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி இல்லை எனத் தெரிய வந்தால், அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும், கல்விக் கட்டணத்தை மட்டும் அரசே செலுத்துகிறது. இதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,000 ரூபாய், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 2,000 ரூபாய், பெருந்துறை ஐ.ஆர்.டி.,யில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், ஸ்ரீ மூகாம்பிகை, பி.எஸ்.ஜி., ஆதிபராசக்தி, கற்பக விநாயகாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 40 ஆயிரம் ரூபாய், மாணவர்கள் கட்டணச் சலுகை பெற முடியும். கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்பில் 2,694 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 348 பேர், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனால், இந்த ஆண்டும் 350 - 400 மாணவர்கள் வரை, தமிழக அரசின் முதல் பட்டதாரி திட்டத்தில் கல்விக் கட்டணச் சலுகை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ""மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின், கல்லூரியில் சேர்ந்த பிறகு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்,'' என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.