கல்லீரல் கொழுப்பு நோய்... குணப்படுத்துவது எப்படி?
வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் இருக்கும், மதுப்பழக்கம் இல்லாத 'பேட்டி லிவர்' எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய், சமீப ஆண்டுகளாக, நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.
அதீத கொழுப்பு கல்லீரலில் படிவதால் கேன்சர் அபாயமும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையும் அதிகரித்து வருகிறது.
நீரிழிவு பாதிப்பு, ரத்தக் கொழுப்பு அதிகரிப்பது, உடல் பருமன் அதிக கலோரிகள் உள்ள உணவுகள், வாழ்க்கை முறை மாற்றம், உயர் ரத்த அழுத்தம், காரணமாகவும் பேட்டி லிவர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வசதியாக, மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் உள்செயல்பாட்டுடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய் என பெயர் மாற்றப்பட்டது.
கல்லீரல் கொழுப்பு நோய் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் காட்டாது.
ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பைப்ரோஸ்கேன், காந்த அதிர்வு எலாஸ்டோகிராபி ஆகிய நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் கண்டறியலாம்.
இதுதவிர, மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவான ஹெச்பிஏ1சி, ரத்தக் கொழுப்பு அளவு, ட்ரைகிளிசரைடு அளவு மற்றும் இன்சுலின் அளவு ஆகிய பரிசோதனைகளும் செய்யலாம்.
வாழ்க்கை முறை மாற்றம், எடைக் குறைப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சர்க்கரை கட்டுப்பாடு இருந்தால் குணப்படுத்த முடியும்.
குறைந்த கொழுப்பு, சர்க்கரையுடன் சமச்சீர் உணவு, இனிப்புகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வழக்கமான நடைபயிற்சி, வாரத்தில் நான்கு நாட்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.