பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் இயல்பாக வாழ முடியும்
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும், ரத்தக்குழாய் வெடித்து ரத்தக் கசிவு மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் பக்கவாதம் உண்டாகிறது.
பொதுவாக, ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுதான், அதிக பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, போதை, புகை மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன், உடல் இயக்க குறைவு, துாக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணங்கள்.
முதுமை காரணமாக ரத்த குழாயில் சுருக்கம் ஏற்படுவதால் பாதிக்கப்படலாம். மரபணு காரணமாகவும் வரலாம். இவ்விரண்டும் தவிர்க்க முடியாதது.
நடக்கும் போது தடுமாற்றம், ஒரு பக்கமாக இழுத்து நடப்பது, பார்வை திடீரென இரண்டாக தெரிவது, மங்கலாக அல்லது தெரியாமல் போவது, கை, கால்களை துாக்க முடியாமல் போவது...
பேச முடியாமல் போவது, குழறுவது முக்கிய அறிகுறிகள். மூளை செல்கள், இணைப்புகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இறந்து கொண்டே இருக்கும் என்பதால், உடனடி சிகிச்சை அவசியம்.
பாதிப்புடன் வருபவர்களுக்கு, உடனடியாக மூளைக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து எந்த வகை பக்கவாதம் என உறுதி செய்து, அதற்கேற்ற சிகிச்சை துவங்கப்படும்.
சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்வது முக்கியம். இதனால், மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவை குறைத்து, விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
ஒரு சிலருக்கு முழுமையாக குணமடைந்த பின்னரும், மீண்டும் வர வாய்ப்புள்ளதால், மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அளவுகளை சரியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.