ADDED : ஏப் 30, 2026 11:47 PM

- நமது நிருபர் -:
விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்களுக்கு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மைசூரின் சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கில், புதிதாக பார்வையாளர்கள் கேலரி கட்டப்படுகிறது. இன்னும் நான்கைந்து மாதங்களில், பணிகள் முடியும்.
பெங்களூரு, கதக், மாண்டியா உட்பட, பல்வேறு இடங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில், பார்வையாளர்கள் கேலரி உள்ளது. ஆனால், மைசூரின் சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கில், இந்த வசதி இருக்கவில்லை. இப்போது முதன் முறையாக, பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
கோடையில் அவதி இது குறித்து, விளையாட்டுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரின் சாமுண்டி விஹார் வெளி விளையாட்டு அரங்கம், அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதற்கு முன் பார்வையாளர்கள் கேலரி இருக்கவில்லை. மழை பெய்தால் அல்லது கோடைக்காலத்தில் விளையாட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் அவதிப்பட்டனர்.
அனைத்து காலங்களிலும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பார்வையாளர் கேலரி அமைக்க வேண்டும் என, விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி சாமுண்டி விஹாரில், பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படுகிறது. இதில் 11 படிகள் இருக்கும். இங்கு அமர்ந்து கொள்வோருக்கு, மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்த கேலரி அமைக்கப்படுகிறது. இதற்காக 8 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இன்னும் நான்கைந்து மாதங்களில் முடிவடையும்.
புத்துயிர் பார்வையாளர்கள் கேலரி அமைப்பதால், மைசூரு விளையாட்டு துறைக்கு புத்துயிர் கிடைக்கும். உள்ளூர் மக்கள், நடை பயிற்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கம், மேலும் அழகாகவும், ஈர்ப்பாகவும் தென்படும்.
பார்வையாளர்கள் கேலரிக்கு, 'டென்சைல் மெம்பரின்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. உலோக கம்பங்கள் அல்லது கேபிள்கள் பொருத்தப்படும். அந்தந்த தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற் போன்று, மேற்கூரை அமைக்கப்படுகிறது. இது மழை, வெயில், குளிரில் இருந்து பார்வையாளர்களை காப்பாற்றும். நிம்மதியாக அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம். தேசிய, சர்வதேச, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளை காண வருவோருக்கு, மிகவும் உதவியாக இருக்கும். தசரா உட்பட, பல்வேறு சிறப்பு நாட்களில், விளையாட்டு போட்டிகளை, எந்த விதமான இடையூறும் இல்லாமல் கண்டு ரசிக்கலாம். வரும் நாட்களில் இருக்கைகள் வசதியும் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
