'டெஸ்ட்' அணியில் இடம் இல்லை கருண் கிரிக்கெட் வாழ்க்கை 'ஓவர்'
'டெஸ்ட்' அணியில் இடம் இல்லை கருண் கிரிக்கெட் வாழ்க்கை 'ஓவர்'
'டெஸ்ட்' அணியில் இடம் இல்லை கருண் கிரிக்கெட் வாழ்க்கை 'ஓவர்'
ADDED : செப் 25, 2025 11:14 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால், கர்நாடகாவின் கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், 33; கர்நாடகாவை சேர்ந்தவர். இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கிற்கு பின், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 'முச்சதம்' அடித்தவர் என்ற பெருமை கருண் நாயருக்கு உண்டு. நீண்ட காலம் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு, கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஒரு வழியாக எட்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த, டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்து கொள்ள கருண் நாயர் தவறி விட்டார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஒரு டெஸ்டில் மட்டுமே அரைசதம் அடித்தார். மூன்று டெஸ்டுகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஒரு டெஸ்ட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர், கருணின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. இது நேற்று உறுதியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, டெஸ்ட் கிரிக்கெட் விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோசமான பார்ம் காரணமாக, அணியில் இருந்து கருண் நாயர் கழற்றி விடப்பட்டார். சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு பொய்த்து போனது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், இனி இந்திய அணியில் கருணுக்கு இடம் கிடைப்பது கடினமே. இதனால் கிட்டத்தட்ட அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறி தான்
- நமது நிருபர் - .