மறைந்து வரும் பாரம்பரிய மல்யுத்த கலை
மறைந்து வரும் பாரம்பரிய மல்யுத்த கலை
மறைந்து வரும் பாரம்பரிய மல்யுத்த கலை
ADDED : செப் 11, 2025 11:43 PM

மைசூரு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தே பாரம்பரிய விளையாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கரடி மனே எனும் மல்யுத்த வீடுகள், இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.
ஒரு காலத்தில் மைசூரில் உள்ள கரடி மனேயில் பயிற்சி பெற்ற மல்யுத்த வீரர்கள், மன்னர்களின் ஆதரவுடன் பவனி வந்தனர். மைசூரு உட்பட மாநிலத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்த பல்வேறு மல்யுத்த வீரர்களை உருவாக்கும் மையங்கள், சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, தசராவில் பங்கேற்பர்.
கூடுதல் கவனம் 'நாட ஹப்பா' எனும் மைசூரு தசராவின்போது, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். தசரா கண்காட்சி மைதானம் அருகில் உள்ள டி.தேவராஜா அர்ஸ் பல்நோக்கு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது, ஒவ்வொரு ஆண்டும் மற்ற நிகழ்ச்சிகளை விட, கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
மைசூரில் ஒரு காலத்தில், 70 முதல் 80 கரடி மனே இருந்தன. தற்போது 20 முதல் 30 வரை மட்டுமே உள்ளன. பல கரடி மனேக்கள் பாதி சிதலமடைந்து இடிபாடுகளாக காட்சி அளிக்கின்றன அல்லது புறக்கணிக்கப்பட்டதால் இடிந்து விழுகின்றன.
மைசூரு லஷ்கர் மொஹல்லாவின் இர்வின் சாலை அருகில் உள்ள தொடா வொக்கலகேரி நான்காவது கிராசில் பயில்வான் சீனிவாசண்ணனவர கரடி மனே' உள்ளது. பல பயில்வான்களை உருவாக்கிய இம்மனே, கடந்தாண்டு டிசம்பரில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதை அறிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இன்னும் சீரமைக்கும் பணியை துவங்கவில்லை.
கூரை இடிந்து விழாமல் இருக்க, ஒரு மூங்கில் கம்பை வைத்து முட்டுக் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த உள்ளூர் எம்.எல்.ஏ., கரடி மனேயை பார்வையிட்டார். 'புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்' என, அப்போது உறுதியளித்தார். இந்த வாக்குறுதியை இன்னும் செயல்படுத்தாததால், மல்யுத்த வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
15 ஆண்டுகள் அதுபோன்று, மண்டி மொஹல்லா அக்பர் சாலையில் கவுடய்யனவர கரடி மனே அமைந்திருந்தது. பல பயில்வான்களை உருவாக்கிய இந்த கரடி மனேயின் தற்போதைய நிலைமை, வேதனை அளிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த இந்த மனை, இன்னும் சீரமைக்காமல், வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
அதுபோன்று மண்டிமொஹல்லா மிஷன் ஆஸ்பிடல் சாலையில் லாவர் பசப்பா கரடி மனே அமைந்து உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதை சீரமைக்க அப்போதே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் கட்டடம் கட்டப்படவில்லை.
ஸ்ரீசங்கர் மடம் மற்றும் ஸ்ரீராம சேவா அறக்கட்டளை தலைவர் பயில்வான் ரவி கூறியதாவது:
ராமர் கோவில், சிவன் கோவில் அருகில் கரடி மனே கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கும்படி மனு கொடுத்துள்ளோம். இதுபோன்று நசர்பாத், இட்டிகேகூடு, நஞ்சுமல்லிகே, கே.ஜி.கொப்பால் உட்பட நகரில் பல பகுதிகளில் கரடி மனே கட்டடங்கள் நிலைமை மோசமாக உள்ளன. சில கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. சில கட்டடங்கள் சீரமைப்புக்காக காத்திருக்கின்றன. பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காகவே இவ்வளவு போராடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மொபைல் மோகம் மூத்த மல்யுத்த வீரர் கூறியதாவது:
தற்போது இளம் தலைமுறையினரிடம் மொபைல் போன் மீது ஏற்பட்டுள்ள மோகம், மல்யுத்தம் மீதான ஆர்வம் குறைய காரணமாக உள்ளது. மல்யுத்தம் என்பது புத்தகங்களில் மட்டுமே படிக்கக்கூடிய ஒன்றாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
மல்யுத்த வீரர்களுக்கு தேவையான ஊக்கம் இல்லை. மைசூரில் பாரம்பரிய மல்யுத்தத்தை காப்பாற்ற மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தாலும், அதன் முக்கியத்துவத்தை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கட்டுரை, மைசூரின் கரடி மனே யின் பாழடைந்த கட்டடங்க ளை பற்றியது மட்டுமல்ல. அச்சுறுத்தலுக்கு உள்ளான பாரம்பரியத்தை பற்றியதாகும். இந்த மல்யுத்த அரங்கங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- நமது நிருபர் -